டெல்டா பகுதியில் தீவிரம் காட்டும் மழை: வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் - வெள்ளியங்கால் ஓடையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு


டெல்டா பகுதியில் தீவிரம் காட்டும் மழை: வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் - வெள்ளியங்கால் ஓடையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 13 Jan 2021 3:42 PM GMT (Updated: 13 Jan 2021 3:42 PM GMT)

டெல்டா பகுதியில் தீவிரம் காட்டும் மழையால், வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளியங்கால் ஓடையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் மழை நீடிக்கிறது.

குறிப்பாக காவிரி டெல்டா பகுதியாக இருக்கும் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சிதம்பரம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இதன் எதிரொலியாக லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 45 அடியாக இருந்தது. 57 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில், அப்படியே சென்னை குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் நேற்று ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஏரிக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால், ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருதி, வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், சேத்தியாத்தோப்பு வி.என். எஸ். மதகு மூலம் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 3 ஆயிரத்து 200 கனஅடி உபரிநீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியேற்றினர். மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 58 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இதேபோல் மணவாய்க்கால் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மணவாய்க்காலிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீரநத்தம் பகுதியில் வெள்ளியங்கால் ஓடையுடன் மணவாய்க்கால் தண்ணீரும் கலந்து வெள்ளமென பெருக்கெடுத்து குமராட்சி கோட்பாடி மதகு வழியாக பழைய கொள்ளிடம் ஆற்றில் கலந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் வீசிய புரெவி புயலால் காட்டுமன்னார்கோவில் பகுதி கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து தற்போதும், வீராணத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் சூழலில், மழையும் தீவிரமாக பெய்து வருவது அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story