போடிமெட்டு மலைப்பாதையில் திடீரென்று பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து பாதிப்பு


போடிமெட்டு மலைப்பாதையில் திடீரென்று பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2021 3:51 PM GMT (Updated: 13 Jan 2021 3:51 PM GMT)

போடிமெட்டு மலைப்பாதையில் திடீரென்று பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடி,

தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்ல கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. இதில் போடிமெட்டு மலைப்பாதை 26 கி.மீ. தூரம் கொண்டது. இதில் 17 கொண்டை ஊசி வளைவுகளும் அடங்கும். இந்த மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களின் வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மழை காலங்களில் போடிமெட்டு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படுவது, பாறைகள் உருண்டு விழுவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போடிமெட்டு பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மலைப்பாதையில் சில இடங்களில் சிறு, சிறு மண் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் அதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் அந்த மண் சரிவை அவ்வப்போது நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

இந்தநிலையில் போடிமெட்டு மலைப்பாதையில் 4-வது கொண்டை ஊசி வளைவுக்கும், ‘எஸ்’ வளைவுக்கும் இடையே சில இடங்களில் நேற்று காலை திடீரென்று பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. அப்போது வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மலைப்பாதையில் விழுந்த பாறைகளை, பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினர். அதன்பிறகே மலைப்பாதையில் வாகனங்களை செல்ல போலீசார் அனுமதித்தனர்.

பாறைகள் உருண்டு விழுந்ததால் போடிமெட்டு மலைப்பாதையில் ேநற்று சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story