பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் அரை நிர்வாண போராட்டம்


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் அரை நிர்வாண போராட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2021 4:00 PM GMT (Updated: 13 Jan 2021 4:00 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

தை திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரே‌‌ஷன்கடைகள் மூலம் மக்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கிடையே ஆட்டோ டிரைவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, மாவட்ட சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகி பாண்டி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மேல்சட்டை அணியாமல் அரை நிர்வாண நிலையில் பங்கேற்றனர்.

மேலும் பொங்கல் வைக்க பயன்படும் மண்பானை ஒன்றையும் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் அரைநிர்வாண போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story