பூ மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்


பூ மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2021 4:31 PM GMT (Updated: 13 Jan 2021 4:31 PM GMT)

கோவையில் உள்ள பூ மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவை-மேட்டுப்பாளையம் ரோடு ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இங்கு 183 கடைகள் இருந்தன. கொரோனா காரணமாக இந்த மார்க்கெட் புரூக்பாண்ட் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டு அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் பழைய பூ மார்க்கெட் எதிரே புதிதாக கடைகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த கடைகள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளது. மேலும் பழைய பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் மூடியே இருந்தது. எனவே அவற்றை இடித்து விட்டு புதிய கடைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்காக நேற்று காலை அங்கு பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு, இடித்து அகற்றும் பணி தொடங்க இருந்தது. இதை அறிந்ததும் பூ மார்க்கெட் வியாபாரிகள் அங்கு திரண்டு, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து அதன் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன் மற்றும் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தில் பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.ஆர்.சி.ரவிச்சந்திரன், செயலாளர் ஏ.ஏ.அன்சாரி உள்பட 100-க்கும் மேற்பட்ட வியாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பூமார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, கொரோனா காரணமாக ஏற்கனவே கடையை இழந்து தவிக்கும் நிலையில் தற்போது எங்களின் வாழ்வாதாரமான பூக்கடைகளை இடிப்பது மேலும் நிலைகுலைய செய்து உள்ளது. பூமார்க்கெட்டை இடித்து அகற்றாமல் சீரமைத்து கொடுத்தால் போதும். அதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story