மாவட்ட செய்திகள்

நேர்மையின் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் “இனி என் வாழ்க்கை உங்களுக்காகத்தான்” - தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் உருக்கம் + "||" + You have to stand on the side of honesty "Now my life is for you" - Kamal Haasan melts at election campaign meeting

நேர்மையின் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் “இனி என் வாழ்க்கை உங்களுக்காகத்தான்” - தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் உருக்கம்

நேர்மையின் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் “இனி என் வாழ்க்கை உங்களுக்காகத்தான்” - தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் உருக்கம்
நேர்மையின் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும். இனி என் வாழ்க்கை உங்களுக்காகத்தான் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உருக்கமாக பேசினார்.
திருப்பூர்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் நேற்று காங்கேயம் பஸ் நிலையம், தாராபுரம் அண்ணா சிலை, மடத்துக்குளம், உடுமலை மத்திய பஸ் நிலையம் ஆகிய பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் கடந்த முறை காங்கேயம் வந்தபோது மாற்றுத்திறனாளி ஒருவர் கூட்டத்தில் புழுதியில் தவழ்ந்து வந்தபோது அவரை கை தூக்கி மேடையில் விட்டோம். அவர் கையிலும் தூசி. எனது கையிலும் தூசி. அந்த தூசியை அவர் தட்டி விட்டபோது, நான் அதை நெற்றியில் திலகமாக வைத்துக்கொண்டேன். அந்த வெற்றி திலகத்துடன் தொடங்கிய பயணம் இப்போது ஒரு சுழற்சி வந்துள்ளது. அடுத்த சுழற்சியின்போது தமிழகத்தில் மாற்றத்தை காண்பதற்கான ஏற்பாடுகளை நீங்கள் தான் செய்வீர்கள். எனக்கு காங்கேயத்தில் உறவு போன்ற நண்பர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் என்னை முதன் முதலில் நடிக்க வைத்த பி.எஸ்.வீரப்பாவின் ஊர் இது.

ஆனந்தஜோதி என்ற படத்தில் நடித்ததன் மூலமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வைத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக சொல்லி வருகிறோம். விளை நிலங்களில் உயர் மின்னழுத்த மின்சார கோபுரங்களை வைக்க கூடாது என்பதை ஒரு சட்டமாக கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறோம். எல்லோரும் கவனிக்க வேண்டிய விவசாயத்தை கவனிக்காததை போல் ஒரு உணர்வு இருக்கிறது. 3 வேளை உணவு சாப்பிடும் அனைவரும் விவசாயத்தை நினைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உண்ணும்போது மண்ணையும் நினைக்க வேண்டும்.

நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டிய நேரம், கிடை மாடுகள் கலாசாரம் அழிவின் விளிம்பில் உள்ளது. அவை காப்பாற்றப்பட வேண்டும். மாட்டு இன ஆராய்ச்சியில் இருப்பவர்கள், நமது பூர்வீக மாடுகளை மிகவும் ஜாக்கிரதையுடன் அரவணைத்து, ஆதரித்து காப்பாற்ற வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் செய்யும். நாட்டு மாடுகளை பேணும் விவசாயிகளுக்கு ஒரு தனி ஊக்கத்தொகை வழங்கவும் நாங்கள் முடிவு செய்து வைத்திருக்கிறோம்.

விவசாயம், நெசவு, கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்கள் மேலும் விருத்தி அடைய திறன் மேம்பாட்டு மையங்கள் இங்கு அமைக்க திட்டம் முன்வைத்துள்ளோம். இவை எல்லாம் படிப்படியாக செய்து ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் புறப்பட்டு இருக்கிறோம்.

கட்சிக்கும் கட்சிக்குமான போட்டி அல்ல, ஊழலுக்கும் நேர்மைக்குமான போட்டி. அதில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. நேர்மையின் பக்கம் நீங்கள் நின்றே ஆகவேண்டும். நான் நேர்மையை முழு குத்தகைக்கு எடுத்தவன் அல்ல, இருந்தாலும் உங்கள் கூட்டத்தில் நிற்கும் அருகதையை நீங்கள் எனக்கு கொடுத்து இருக்கிறீர்கள். இது காசு கொடுத்து திரட்டிய கூட்டம் அல்ல, நீங்கள் நேர்மையை மதித்து அன்பினால் இங்கு திரண்டிருக்கிறீர்கள். இது பலருக்கும் வாய்க்காது. எனக்கு வாய்த்திருக்கிறது.

அதற்கு உங்களுக்கு நன்றி சொல்லும் ஒரே வழி உங்கள் சேவையில் இருப்பது தான். இனி என் வாழ்க்கை உங்களுக்காகத் தான். அதனால் தான் என்னை அறிமுகப்படுத்தும்போது உங்களில் நான் என்று கூறுகிறேன். சினிமா நட்சத்திரமாக அல்ல, உங்கள் வீட்டில் ஒரு சிறு விளக்காக இருக்க நான் ஆசைப்படுகிறேன். அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் தான் செய்ய வேண்டும். எங்கள் திட்டம் நிறைவேற எங்கள் கரத்திற்கு வலுசேர்க்க வேண்டியது நீங்கள் தான். அப்படி செய்தால் நாளை நமதாகும்.

உங்கள் ஆசி, உங்கள் நம்பிக்கை எல்லாம் மக்கள் நீதி மய்யத்தின் மீது இருக்கிறது. இது மாற்றத்துக்கான கூட்டம். தமிழக அரசியலை மாற்றிப்போடுவதற்கான ஒரு ஆரம்பம். அந்த நம்பிக்கையில் தான் நான் அரசியலில் இறங்கினேன். கண்டிப்பாக உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். இது சரித்திரம் நமக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பு. இங்கு பெரியவர் ஒருவர் வெற்றி நிச்சயம் என்று சொல்லுகிறார். நீங்கள் சொன்னால் அது நடக்காமல் இருக்குமா?. கண்டிப்பாக நடக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வாக்குறுதி வித்தியாசமான வாக்குறுதி.

அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிப்பார்கள். என் அதிர்ஷ்டம் உங்களிடம் இருந்து வாக்குறுதி கிடைக்கிறது. வெற்றி நிச்சயம் என்று உங்களிடம் இருந்து ஒலிக்கிறது.

இங்கு காற்றாலை மின் உற்பத்தியையும், காற்றாலை தொழிலையும் ஊக்குவிக்கும் பணியை மக்கள் நீதி மய்யம் செய்யும். தாராபுரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கழிப்பிட வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் பட்டியல் போட்டு வைத்துள்ளோம். தாராபுரத்தில் விளைவிக்கப்பட்ட செங்கரும்பை கொள்முதல் செய்யாமல் பூஞ்சை பிடித்த நோஞ்சான் கரும்புகளை ரேஷன் கடையில் உங்களுக்கு வினியோகம் செய்ய வைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் மாற வேண்டும் என்றால், நாளை நமதாக வேண்டும் என்றால் உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த ஓட்டுரிமை என்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். உங்கள் விரல் அசைவில் அரசியல் மாறிவிடும். அதை நான் நம்புவதை போல் நீ்ங்களும் நம்பினால் வெற்றி நமதாகும்.

மடத்துக்குளம் பகுதியில் தொன்மையான கல் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தலமாக மாறுவதற்கான அனைத்து வழிகளும் உள்ளன. மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை செவிசாய்த்து கேட்டு அதை அரசு செய்ய வேண்டும். மடத்துக்குளம் நால்ரோட்டில் ஒரு ரவுண்டானா வேண்டும் என்று மக்கள் பலநாட்கள் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் விபத்துகள் தொடர்கிறது. அதை நிறைவேற்றிக்கொடுக்காமல் இருக்கிறார்கள்.

தென்னை மரம் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய நாங்கள் திட்டம் வைத்துள்ளோம். அது இங்கு கொண்டுவரப்படும். கரும்பு விவசாயம், வெல்லம் உற்பத்தி பாதுகாக்கப்படும்.

நாங்கள் கவிதை எழுதும்போது நினைவுக்கு வருபவர் உடுமலை நாராயணகவி. மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கான உதவிகளை செய்ய இருக்கிறோம். விவசாயிகளிடம் கேட்டு தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதை மக்கள் நீதி மய்யம் செய்யும். அரசுக்கு பிடித்ததை விவசாயிகளுக்கு கொடுத்தால் அது அவர்களுக்கு பொருந்தாமல் போகலாம். உடுக்கம்பாளையம், பள்ளப்பாளையம், கெடிமேடு, குடிமங்கலம், சின்னவீரம்பட்டி, பெரியப்பட்டி, பெரியகோட்டை ஆகிய ஊர்களில் ஏரிகள் சீரமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசார நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, மாவட்ட துணை செயலாளர் கோனேரிப்பட்டி பாலசுப்பிரமணியன், நற்பணி இயக்க செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர்கள் ஆனந்தமுருகன்(காங்கேயம்), ராஜா(தாராபுரம்), ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக்ராஜா(மூலனூர்), சதீஷ்குமார், ஸ்டீபன்ராஜ்(காங்கேயம்), தாராபுரம் நகர நிர்வாகிகள் மைக்கேல், காஜாமைதீன், சசிகுமார், அஜித், ஞானமூர்த்தி, கோபால், ஆதிதிராவிடர் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தாராபுரத்தில் கமல்ஹாசன் பேசும்போது மழை பெய்தது. மழையில் நனைந்தபடி கமல்ஹாசன் பேசினார். பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகம் பேர் கமல்ஹாசன் பேச்சை கேட்க திரண்டனர். பின்னர் தேர்ப்பட்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

அதன்பிறகு கட்சி நிர்வாகிகளுடன் அங்கு ஆலோசனை நடத்தினார். மேலும் அங்கிருந்த மாட்டுப்பண்ணையை பார்வையிட்டார்.