அரியலூர்-பெரம்பலூரில் கொட்டும் மழையிலும் பொங்கல் வியாபாரம்


அரியலூர்-பெரம்பலூரில் கொட்டும் மழையிலும் பொங்கல் வியாபாரம்
x
தினத்தந்தி 13 Jan 2021 11:23 PM GMT (Updated: 13 Jan 2021 11:23 PM GMT)

அரியலூர்-பெரம்பலூரில் கொட்டும் மழையிலும் பொங்கல் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழை நேற்று கனமழையாக பெய்தது. ஆனாலும், கொட்டும் மழையிலும் பொங்கல் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கொட்டும் மழையிலும் கையில் குடையுடன் வந்து கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், மளிகை பொருட்கள், போகி பண்டிகைக்காக இறைச்சி, கருவாடு ஆகியவற்றை வாங்கி சென்றனர். குடை எடுக்காமல் வந்த சிலர் மழையில் நனைந்தபடி பொங்கல் பொருட்களை வாங்கி சென்றனர்.

மழையால் சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து பழம், பூ, மஞ்சள் கொத்து விற்கும் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். கடைகள் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. அரியலூரில் நேற்று 10 செ.மீ மழை பெய்தது. மழையின் காரணமாக அனைத்து வியாபாரங்களும் குறைவாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. நேற்று காலை முதல் மதியம் வரை வானம் வெளுத்து காணப்பட்டது.

மதியத்திற்கு பிறகு பலத்த மழை கொட்டியது.

இதனால் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ரோஸ்நகர், புதிய பஸ்நிலையம், துறைமங்கலம் நான்குசாலை இடையே உள்ள தெருக்கள், துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் அவ்வையார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

பெரம்பலூர் நகரில் பலர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடைவீதிக்கு சென்று ஜவுளி மற்றும் பொங்கல் பொருட்களை வாங்கி சென்றனர்.

மழை அளவு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

செட்டிகுளம்-55, பாடாலூர்-46, அகரம்சிகூர்-90, லெப்பைக்குடிகாடு-90, புதுவேட்டக்குடி-51, பெரம்பலூர்-48, எறையூர்-53, கிருஷ்ணாபுரம்-35, தழுதாழை-36, வி.களத்தூர்-30, வேப்பந்தட்டை-51.

Next Story