9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 14 Jan 2021 12:02 AM GMT (Updated: 14 Jan 2021 12:02 AM GMT)

9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

களக்காடு,

களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்ததால் களக்காடு தலையணை கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மூடப்பட்டுள்ள தலையணையை திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து நேற்று முதல் களக்காடு தலையணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தலையணை நுழைவு வாயில் மற்றும் சோதனை சாவடி திறக்கப்பட்டு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர் மழையின் காரணமாக தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முதல் நாளிலேயே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மழை பெய்து கொண்டே இருந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு தலையணை திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story