மணிமுத்தாறு அணையில் அமைச்சர் ராஜலட்சுமி நேற்று ஆய்வு செய்தார்.
அம்பை,
தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அணை நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 28,798 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மணிமுத்தாறு அணையில் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் ேநற்று நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் கொட்டும் மழையிலும் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியவை குறித்து தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை விரிவாக எடுத்துக்கூறினார்.
பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், ‘பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் ஏற்கனவே மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கு ஏதுவாக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பருவ மழையினால் சேதமடைந்துள்ள விவசாய பயிர்களுக்கு அரசு சார்பில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
தொடர்ந்து அவர் ஆலடியூர் சமுதாய நலக்கூடத்தில் தங்கி உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார்.
அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், தாசில்தார் வெற்றிச்செல்வி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, நகர செயலாளர்கள் அறிவழகன், பழனிகுமார், ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
திசையன்விளை பகுதியில் மழையின்றி குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.