விராலிமலை அருகே மழையால் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் தொழிலாளி பலி


விராலிமலை அருகே மழையால் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 Jan 2021 12:12 AM GMT (Updated: 14 Jan 2021 12:12 AM GMT)

விராலிமலை அருகே சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் முடிதிருத்தும் தொழிலாளி பலியானார்.

விராலிமலை, 

விராலிமலை தாலுகா தேங்காய்திண்ணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சின்னராசு (வயது 40). முடிதிருத்தும் தொழிலாளி. இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இ்ந்தநிலையில் இவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

*கத்தலூர் ஊராட்சி செவந்தியாணிப்பட்டி கிராமத்தின் சாலையோரத்தில் உள்ள விவசாய கிணற்றின் ஒரு பகுதி சுவர் சரிந்து கிணற்றுக்குள்விழுந்தது.

இதனையடுத்து அதன் அருகே உள்ள சாலையை பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படும் என கருதி பொதுமக்கள் யாரும் தற்காலிகமாக இந்த சாலையை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

கறம்பக்குடி

*கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு வடக்குதெருவைச் சேர்ந்த அண்ணாத்துரை (60) என்பவரது வீட்டின் சுவர் இடிந்த விழுந்தது. குடும்பத்தினர் மற்றொரு பகுதியில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கறம்பக்குடி யூனியன் அலுவலகம் பின்பகுதியில் அய்யனார் கோவில் சாலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கனமழையால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனடியாக தண்ணீரை வெளியேற்ற அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

*கறம்பக்குடி அம்புக்கோவில் சாலையை சேர்ந்த அ.தி.மு.க.நகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பாக்கியம் (58) என்பவரது வீட்டின் சுவர் மழையால் இடிந்து விழுந்தது.

பொன்னமராவதி-கீரனூர்

*பொன்னமராவதி புதுவளவு பகுதியில் உள்ள அழகி என்பவர் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன.

* கீரனூர் அருகே பள்ளத்துப்யட்டி ஊராட்சி ஓ.வி.கே.நகர் பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளியான சந்திரசேகரரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

அரிமளம்

*அரிமளம் ஒன்றியத்தில் வாளரமாணிக்கம், அகவயல், காரமங்களம், கே.ராயவரம், புதுநிலைவயல் ஆகிய வருவாய் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளது. கீழப்பனையூர் உள்ளிட்ட பல்வேறு வருவாய் சரகங்களில் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம்

*கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மண் வீடுகளுக்கு புதிய மண் பூசி செம்மண்ணில் புதிய அடுப்புகள் செய்து புதிய மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுவது பாரம்பரிய வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளுக்கும் மண் பூச வழியின்றி தவித்த பொதுமக்கள் புதிய மண் அடுப்புகள் செய்து காய வைக்க வெயில் இல்லாததால் மண் அடுப்புகளும் செய்ய முடியவில்லை. இதனால் இந்த வருடம் பாரம்பரிய முறையை மாற்றி புதிய இரும்பு, சுடுமண் அடுப்புகளில் பொங்கல் வைக்கின்றனர்.

* தொடர் மழையால் இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், அன்னவாசல், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், மாங்குடி, வயலோகம், பெருமநாடு, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

ஆண் பிணம்

*ஆவூர் அருகே சிங்கதகுறிச்சி கிராமத்தை ஒட்டிய குளத்தின் அருகே காட்டு வாரியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவுடையார்கோவில்

*ஆவுடையார்கோயில் அருகே உள்ள பாண்டிமனை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பழனி. இவரது வீடு பலத்த மழையால் சுவர் இடிந்து விழுந்தது.

Next Story