மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி + "||" + Interview with Vijayabaskar, Minister of State for Home Affairs, for spreading misinformation on social media about the corona vaccine

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
கொரோனா தடுப்பூசி குறித்து சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திருச்சி, 

திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், அறந்தாங்கி, நாகை ஆகிய 9 சுகாதார மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் வனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் திருச்சிக்கு 17,100 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரியலூருக்கு 3,300, பெரம்பலூருக்கு 5,100, அறந்தாங்கிக்கு 3,100, புதுக்கோட்டைக்கு 3,800, கரூருக்கு 7,800, தஞ்சைக்கு 15,500, திருவாரூருக்கு 6,700, நாகப்பட்டினத்துக்கு 6,400 என மொத்தம் 68 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதுபற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா தடுப்பூசி 16-ந்தேதியில் இருந்து இந்தியா முழுவதும் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி தடுப்பூசி போடும் நிகழ்வை தொடங்கி வைக்கிறார். தமிழகத்துக்கு கோவி‌ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிக்கு ஒப்புதல் வந்துள்ளது. கோவி‌ஷீல்டு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது.

அங்கிருந்து திருச்சி வந்து திருச்சியில் இருந்து 9 சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 6 லட்சம் முன்களபணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. திருச்சி மண்டலத்தில் 9 மாவட்டங்களுக்கு 68 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் வந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 307 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.

மதுஅருந்தக்கூடாது

தடுப்பூசி போடும்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்படும். மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகளை எந்த அச்சமும் இல்லாமல் மக்கள் போட்டு கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் நானே போட்டு கொள்வேன். ஆனால் விதிமுறைப்படி நான் போட்டு கொள்ள முடியாது. முதலில் முன்களபணியாளர்களுக்கு தான் போட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அனுமதி பெற்று நானே போட்டு கொள்கிறேன்.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். ஆனால் அவர்கள் கண்காணிப்பு அறையில் 30 நிமிடம் காத்து இருக்க வேண்டும். ஒருவேளை ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கூட அதை எதிர்கொள்ளவும் மருத்துவர்கள், செவிலியர்கள் பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர். மதுஅருந்திவிட்டு தடுப்பூசி போடக்கூடாது. அந்த நேரத்தில் மதுவை தவிர்த்து விட வேண்டும். தமிழகத்தில் 10 சதவீதமாக இருந்த கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு தற்போது 1.2 சதவீதமாக மாறி இருக்கிறது.

தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை

தமிழகத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பு இருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று. இப்போது தடுப்பூசிகளும் வந்துவிட்டதால் தமிழக மக்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். ஆனால் தடுப்பூசிகளை முழுமையாக போடும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடர்ந்ததால் தான் உருமாறிய கொரோனா பாதிப்புடன் வந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தது. கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தலில் பேரம் பேசுவதற்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. நாடகம் ஆடுகிறது
சட்டசபை தேர்தலில் பேரம் பேசுவதற்காக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. நாடகம் ஆடுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
2. அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு
அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
3. சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.88.58 கோடி பணப்பலன் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் 434 பேருக்கு ரூ.88.58 கோடி பணப்பலன்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
5. ‘ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும்’ அர்ஜூன் சம்பத் பேட்டி
‘நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும்’ என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.