புனேயில் இருந்து புதுவைக்கு வந்த கொரோனா தடுப்பூசிகள்


புனேயில் இருந்து புதுவைக்கு வந்த கொரோனா தடுப்பூசிகள்
x
தினத்தந்தி 14 Jan 2021 12:37 AM GMT (Updated: 14 Jan 2021 12:37 AM GMT)

புனேயில் இருந்து புதுவைக்கு 17,500 கொரோனா தடுப்பூசிகள் வந்தன.

புதுச்சேரி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு இறுதிகட்ட பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ளன. நாடு முழுவதும் வருகிற 16-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர், செவிலியர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

அதன்படி புதுவையில் முதல்கட்டமாக சுமார் 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே 2 கட்ட ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுவை மாநிலத்திற்கு முதல் கட்டமாக மத்திய அரசு 17 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் ஒதுக்கியது. இந்த தடுப்பூசி நேற்று புனேயில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து பாதுகாப்பு வேன் மூலம் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை, காரைக்காலுக்கு சேர்த்து 17,500 கொரோனா தடுப்பூசிகள் இன்று (நேற்று) மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குளிர்சாதன பெட்டியில் வைத்து மருந்து சேமிப்பு கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த பெட்டியின் வெப்பநிலையை சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். மாகிக்கு இன்னும் தடுப்பூசிகள் சென்று சேரவில்லை. நாளை(இன்று) அங்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனாமிற்கு 320 தடுப்பூசிகள் சென்றுள்ளன. வருகிற 16-ந் தேதி காலை புதுவையில் 5 முதல் 7 மையங்களில் இந்த தடுப்பூசிகள் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story