புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் ராஜினாமா - அரசு வீடு, காரை ஒப்படைத்தார்


புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் ராஜினாமா - அரசு வீடு, காரை ஒப்படைத்தார்
x
தினத்தந்தி 14 Jan 2021 1:00 AM GMT (Updated: 14 Jan 2021 1:00 AM GMT)

புதுவை சுகாதாரத் துறை அமைச்சரான மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி அரசு சார்பில் வழங்கிய வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார்.

புதுச்சேரி,

புதுவை யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட4 பிராந்தியங்களில் ஒன்று ஏனாம்.

காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு கடந்த 2016 தேர்தலின்போது எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ். இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். சட்டசபைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் புதுவை அரசியலில் இருந்து விலகி ஆந்திர அரசியலில் அவர் ஈடுபடப் போவதாக சமீபத்தில் பேச்சுகள் எழுந்தன.

இந்தநிலையில் 25 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியதற்காக சிறந்த எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதற்காக மல்லாடி கிருஷ்ணாராவுக்கு விருது வழங்கும் விழா கடந்த 6-ந்தேதி ஏனாமில் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், ஆந்திர மாநில சபாநாயகர் தமேனி சீத்தாராம் மற்றும் ஆந்திர அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் பேசுகையில், ஏனாமில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். கவர்னர் கிரண்பெடி பல திட்டங்களை முடக்கிய போதிலும் அதையெல்லாம் முறியடித்து ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை, விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு வசதிகளை நிறைவேற்றி இருக்கிறேன். பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் மக்களின் மனங்களில் இருப்பதைத் தான் விரும்புகிறேன். நான் ஆந்திர அரசியலுக்கு செல்ல இருப்பதாக கூறி வருகின்றனர். நான் எடுக்கும் முடிவு வருத்தமளிப்பதாகத் தான் இருக்கும். ஆனால் இதுதான் சரியான நேரம். வரும் சட்டமன்ற தேர்தலில் நானோ, எனது குடும்பத்தாரோ போட்டியிடமாட்டோம் என்றார்.

கவர்னரை கண்டித்து புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட மல்லாடி கிருஷ்ணாராவ் பேசும்போது, புதுவை அரசியலில் இருந்து நான் விலகமாட்டேன். இங்கு என்னை தெலுங்கர் என்கிறார்கள். ஆந்திராவில் தமிழர் என்கிறார்கள். நான் எங்கும் போக மாட்டேன். கவர்னர் கிரண்பெடி புதுவையில் போட்டியிட தயார் என்றால் எந்த தொகுதியிலும் அவரை சந்திப்பேன் என்று சவால் விட்டார். மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவின் இந்த பேச்சு புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தகைய சூழ்நிலையில் அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இதுவரை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

அந்த கடிதத்தை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டு கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பிவைத்தால்தான் முறைப்படி ராஜினாமா அமலுக்கு வரும். ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட வீட்டினை கடந்த சில மாதங்களுக்கு முன்பே காலி செய்துவிட்டார். அதேபோல் அரசு சார்பில் வழங்கப்பட்ட காரையும் ஒப்படைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமாவுக்கான காரணம் குறித்து அறிய மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. புதுவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா கட்சி வளைக்க முயற்சி எடுத்து வரும் நிலையில் அமைச்சர் பதவியை மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் ராஜினாமா செய்து இருப்பது புதுவை அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி அரசியல் செய்யும் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போதும் தனது எம்.எல்.ஏ.வை பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story