வீட்டுமனை வாங்கிய பணத்தகராறு: ரியல் எஸ்டேட் அதிபா் வெட்டிக் கொலை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


வீட்டுமனை வாங்கிய பணத்தகராறு: ரியல் எஸ்டேட் அதிபா் வெட்டிக் கொலை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x

பெங்களூருவில் வீட்டுமனை வாங்கிய பணத்தகராறில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு பேகூரு அருகே வெலிங்டன் பேரடைஸ் லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் மாதவரெட்டி (வயது 55). இவர், ரியல்எஸ்டேட் அதிபர் ஆவார். மாதவரெட்டி புதிதாக லே-அவுட் அமைத்துள்ளார். அந்த லே-அவுட்டில் ஒரு வீட்டுமனையை பேகூருவை சேர்ந்த மனோகர் (30) என்பவரின் தந்தை வாங்கி இருந்தார். அந்த வீட்டுமனைக்கு உரிய பணத்தை அவர் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாதவரெட்டிக்கும், மனோகருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஆனால் மனோகரின் தந்தை வீட்டுமனைக்கு உரிய பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து பேசுவதற்காக நேற்று முன்தினம் மாலையில் மனோகர் வீட்டுக்கு மாதவரெட்டி சென்றார். அங்கு மனோகரின் தந்தை இல்லை. இதையடுத்து, வீட்டுமனைக்கு உரிய பணத்தை கொடுக்கும்படி மனோகரிடம் மாதவரெட்டி கேட்டுள்ளாா். இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

வாக்குவாதம் முற்றவே திடீரென்று ஆத்திரமடைந்த மனோகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாதவரெட்டியை வெட்டியதாக தெரிகிறது. இதில், கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து அவர் உயிருக்கு போராடினாா். உடனே அங்கிருந்து மனோகர் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய மாதவரெட்டி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாதவரெட்டி பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி அறிந்ததும் பேகூரு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றும், ஆஸ்பத்திரிக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாதவரெட்டியிடம் வாங்கிய வீட்டுமனைக்கு பணம் கொடுக்காததால் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பேகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மனோகரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story