கர்நாடக மந்திரிசபை 4-வது முறையாக விரிவாக்கம் 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர் கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்


கர்நாடக மந்திரிசபை 4-வது முறையாக விரிவாக்கம் 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர் கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
x
தினத்தந்தி 14 Jan 2021 1:35 AM GMT (Updated: 14 Jan 2021 1:35 AM GMT)

கர்நாடக மந்திரிசபை 4-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிதாக 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

எடியூரப்பாவின் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை நிரப்பும் வகையில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு பா.ஜனதா மேலிட தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தார். 3 நாட்களில் மந்திரிசபை விஸ்தரிப்புக்கு அனுமதி வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் மந்திரிசபை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால் எடியூரப்பா அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா மேலிட தலைவர்களின் அழைப்பின் பேரில் எடியூரப்பா டெல்லி சென்றார். அங்கு உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களையும் நிரப்ப பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கியது.

அதன்படி கர்நாடக மந்திரிசபை 13-ந் தேதி (நேற்று) விரிவாக்கம் செய்யப்படும் என்றும், 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் எடியூரப்பா அறிவித்தார். அதாவது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் லிம்பாவளி, உமேஷ்கட்டி, முருகேஷ் நிரானி, எஸ்.அங்கார், எம்.எல்.சி.க்கள் ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ்வர் ஆகியோர் மந்திரியாக பதவி ஏற்பார்கள் என்று எடியூரப்பா கூறினார். அதன்படி கர்நாடக மந்திரிசபை 4-வது முறையாக நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நேற்று மதியம் 3.50 மணிக்கு நடைபெற்றது. முதல்-மந்திரி எடியூரப்பா முன்னிலையில் புதிய மந்திரிகளாக உமேஷ்கட்டி (ஹுக்கேரி தொகுதி), முருகேஷ் நிரானி (பீலகி) , அரவிந்த் லிம்பாவளி (மகாதேவபுரா), எஸ்.அங்கார் (சுள்ளியா), எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ்வர், ஆர்.சங்கர் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதில் 3 பேர் எம்.எல்.சி.க்கள். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய மந்திரிகள் அனைவரும் கடவுள் பெயரில் உறுதிமொழி ஏற்றனர். புதிய மந்திரிகளுக்கு கவர்னர் மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரிகள் பசவராஜ் பொம்மை, பி.சி.பட்டீல், ஸ்ரீமந்த் பட்டீல், உள்பட மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மந்திரிகள் பதவி ஏற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனுமதி சீட்டு இருந்தவர்கள் மட்டுமே கவர்னர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர். புதிய மந்திரிகளின் ஆதரவாளர்கள் கவர்னர் மாளிகை முன்பு கூடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பதவி ஏற்பு விழாவை தலைமை செயலாளர் ரவிக்குமார் தலைமை ஏற்று நடத்தினார்.

அவர் ஒவ்வொருவராக பெயரை குறிப்பிட்டு பதவி ஏற்க வரும்படி அழைக்க, 7 பேரும் தனித்தனியாக மந்திரியாக பதவி ஏற்றனர். மந்திரிகள் பதவி ஏற்பு விழா 30 நிமிடங்களில் நடந்து முடிந்தது. பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும், கவர்னர், முதல்-மந்திரியுடன் புதிய மந்திரிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்றதின் மூலம் கர்நாடக மந்திரிசபையின் எண்ணிக்கை முழு அளவான 34 ஆக உயர்ந்துள்ளது.

மந்திரிசபையில் காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன. முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்று 18 மாதங்களுக்கு பிறகு தற்போது முழுமையான மந்திரிசபை அமைந்துள்ளது. மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மந்திரிசபையில் இதுவரை இல்லாத அளவுக்கு எம்.எல்.சி.க்களின் பங்கு அதிகரித்துள்ளது. எம்.எல்.சி.க்களில் ஒரு துணை முதல்-மந்திரி உள்பட 5 மந்திரிகள் எடியூரப்பா மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பதவி ஏற்ற மந்திரிகளில் கடலோர மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வட கர்நாடகத்தை சேர்ந்த 3 பேர், பெங்களூரு பகுதியை சேர்ந்த 2 பேர், மைசூரு மண்டலத்தில் ஒருவர் உள்ளனர்.

நேற்று பதவி ஏற்ற மந்திரிகள் எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர் ஆகியோர் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் எம்.எல்.சி.க்களாக தேர்ந்து எடுக்கப்பட்டு தற்போது மந்திரி பதவியை பெற்றுள்ளனர். எம்.டி.பி.நாகராஜ், இந்தியாவிலேயே கோடீசுவர அரசியல்வாதி என பெயர் பெற்றவர். அவருக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. அவர் ரூ.14 கோடி விலை மதிப்புடைய அதிசொகுசு கார் ஒன்றையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பா முன்பு 2008-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது முருகேஷ் நிரானி தொழில்துறை மந்திரியாக இருந்தவர். எஸ்.அங்கார் முதல் முறையாக மந்திரி பதவியை அடைந்துள்ளார். முருகேஷ் நிரானி, எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், உமேஷ்கட்டி அரவிந்த் லிம்பாவளி, சி.பி.யோகேஷ்வர் ஆகிய 6 பேரும் ஏற்கனவே மந்திரிகளாக பணியாற்றியவர்கள். பூர்ணிமா சீனிவாசுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று நேற்று முன்தினம் வரை தகவல் வெளியாகி வந்தது. ஆனால் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற முனிரத்னாவுக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பெயர் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார். அவரும் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து வந்த 17 எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர் எச்.விஸ்வநாத். அவரும் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது.

இதை காரணமாக வைத்து எச்.விஸ்வநாத்துக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. தனக்கு மந்திரி பதவி வழங்காததால் அவரும் எடியூரப்பாவுக்கு எதிராக பகிரங்கமாக குற்றம்சாட்டு கூறியுள்ளார். எடியூரப்பாவுக்கு நன்றி இல்லை என்று விமர்சித்துள்ளார். புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில், சிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தனர்.

குறிப்பாக முதல்-மந்திரி எடியூரப்பா முகக்கவசம் அணியாமல் இருந்தார். பதவி ஏற்பு விழாவின்போது, மேடையில் அவரும் முக்ககவசம் அணிந்திருந்தார். அதே நேரத்தில் கவர்னர் விருந்தினர்கள் அமர இருக்கைகள் சமூக இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. புதிதாக பொறுப்பேற்ற மந்திரிசி.பி.யோகேஷ்வர், கன்னட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மந்திரி பதவி வழங்காததால் விஜயாப்புராவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியை விட்டு அகற்றும் வரை ஓய மாட்டேன் என்று கூறி இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாளிக்கும் ஒரு பெரிய சவால் எடியூரப்பா முன்பு உள்ளது. அதை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவரை போலவே எம்.எல்.ஏ.க்கள் திப்பாரெட்டி, அரவிந்த் பெல்லத், ரேணுகாச்சார்யா உள்ளிட்டோரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

Next Story