தேர்தல் தேதி முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் அமைச்சர் தகவல்


தேர்தல் தேதி முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 14 Jan 2021 2:10 AM GMT (Updated: 14 Jan 2021 2:10 AM GMT)

தேர்தல் தேதி முடிவுக்கு பின்னரே பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழூரில் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள்-மாடுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 98 சதவீத மாணவர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளன. சூழ்நிலைக்கேற்ப மற்ற வகுப்புகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 6,029 பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் தேதி

இந்தநிலையில் மாணவர்களுக்கு எந்தெந்த பாடத்திட்டங்கள் நடத்துவது என்பது குறித்த அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணை அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். தனியார் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாக புகார் வந்தால், அந்தந்த பள்ளிகளிடம் அதுகுறித்து கேட்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 

Next Story