மாவட்ட செய்திகள்

இடைவிடாது பெய்து வரும் அடைமழை: மலைப்பாதையில் மண்சரிவு; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மின்சாரம் துண்டிப்பு-போக்குவரத்து பாதிப்பு + "||" + Landslide on the hillside Flooding in rivers Power outage-traffic damage

இடைவிடாது பெய்து வரும் அடைமழை: மலைப்பாதையில் மண்சரிவு; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மின்சாரம் துண்டிப்பு-போக்குவரத்து பாதிப்பு

இடைவிடாது பெய்து வரும் அடைமழை: மலைப்பாதையில் மண்சரிவு; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மின்சாரம் துண்டிப்பு-போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையினால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் அடைமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது. மேலும் அவ்வப்போது பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. அதேநேரம் இடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.

திண்டுக்கல் பழைய கோர்ட்டு கட்டிடம் அருகே நின்ற ராட்சத மரம் திடீரென சாய்ந்தது. அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது அந்த மரம் விழுந்தது. இதில் தலா ஒரு கார், ஆட்டோ சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையினால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதேபோல் வெள்ளிநீர் வீழ்ச்சி மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக பிற்பகல் 2 மணி அளவில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் வடகரைபாறை என்னுமிடத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் உள்ள மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மரத்தை வெட்டி அகற்றியதோடு, பாறைகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில், மரம் வேரோடு சாய்ந்ததில் 3 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. செயின்ட் மேரிஸ் சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததில் அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

தொடர் மழையினால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேடசந்தூர் அருகே உள்ள ஆத்துப்பட்டி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தின் ஒரு பகுதியில் குடகனாறு செல்கிறது. இந்த கிராமத்தை கடந்து தான், நான்கு வழிச்சாலையில் உள்ள விட்டல்நாயக்கன்பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆத்துப்பட்டி-விட்டல்நாயக்கன்பட்டி இடையே குடகனாற்றின் குறுக்கே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்துப்பட்டி தடுப்பணைக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த மண்சாலையில் அரிப்பு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்துப்பட்டி கிராம மக்கள் ஊரில் இருந்து வெளியேற முடியவில்லை. வெளியூர் சென்றவர்களும் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த கிராமமே ஒரு தீவு போல மாறி விட்டது.

எனவே ஆத்துப்பட்டிக்கு செல்வதற்கு குடகனாற்றின் குறுக்கே நிரந்தரமாக பாலத்துடன் கூடிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டிதீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பெரும்பாறை பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இதன் காரணமாக பெரும்பாறை-தாண்டிக்குடி மலைப்பாதையில் உள்ள ஏணிக்கல் என்ற பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாஸ், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் மற்றும் சாலை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் பாறையை அப்புறப்படுத்தினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.

தருமத்துப்பட்டி-கோம்பை மலைப்பாதையில் தோனிமலை அருகே மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத கற்களும் உருண்டு விழுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். பொங்கல் பொருட்கள் வாங்க முடியாமல் மலைக்கிராம மக்கள் தவித்தனர்.

மலைப்பாதை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் உருண்டோடி விட்டநிலையில் போதிய பராமரிப்பு இல்லாததே மண்சரிவு ஏற்பட்டதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே தோனிமலை பகுதியில் வசிக்கிற மக்கள் ஒன்று சேர்ந்து மலைப்பாதையை சீரமைத்தனர்.

கொடைக்கானல் மற்றும் பழனி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அனைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணைகளின் பாதுகாப்பு கருதி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வருகிற தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் சண்முகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இருகரைகளை தொட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரத்தில் மக்கள் செல்ல வேண்டாம் என ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் கால்நடைகளை நீர் அருந்த அழைத்துச் செல்லக்கூடாது என்றும், பொதுமக்கள் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் ஆற்றுக்கு செல்லக் கூடாது எனவும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்திரப்பட்டி அருகே உள்ள 16 புதூர் கிராமத்தில் காலனி பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் சேதம் அடைந்து மேற்கூரை வழியாக மழை நீர் கசிந்து வருகிறது. வீடுகளில் தங்கியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் அந்த வீடுகளில் தங்கியிருந்த குடும்பங்களை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கட்டிடத்தில் நேற்று தங்க வைக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ் மற்றும் அ.தி.மு.க.வினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சிறுமலையில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏ.வெள்ளோடு அருகே மலையடிவாரத்தில் ராமக்காள் அணை வேகமாக நிரம்பி வருகிறது.

இதேபோல் தண்ணீர் வரத்து ஏற்பட்டால் இன்னும் ஒரிரு நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் ஷட்டர்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் தண்ணீர் வீணாக வெளியேறும் சூழல் நிலவுகிறது.