அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு + "||" + Rahul Gandhi will arrive in Madurai on a private plane today to witness the Avanyapuram Jallikattu festival
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காண காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை,
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த விழாவை காண காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவரான ராகுல்காந்தி மதுரை வருகிறார். அவர், ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார்.
இதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று பகல் 11.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரம் பகுதிக்கு வருகை தருகிறார்.
சுமார் ஒரு மணி நேரம் அவர் தமிழர்களின் வீர விளையாட்டை மேடையில் அமர்ந்து காண்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளர் தினேஷ்குண்டுராவ், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வருகிறார்கள்.
போலீசார் குவிப்பு
தொடர்ந்து தெற்கு வெளிவீதி, பழங்காநத்தம் பகுதிக்கு வரும் ராகுல்காந்திக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு தமிழர் பண்பாடு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னர் ராகுல்காந்தி பிற்பகல் 2 மணிக்கு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
ராகுல் காந்தி மதுரை வருகையையொட்டி போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடம், மேடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள். விழா மேடை முழுவதும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ராகுல்காந்தி மதுரை வருகையின் போது, அவரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரத்துக்கு வரும் ராகுல்காந்தி இங்குள்ள காந்தி, காமராஜர், பெரியார் சிலைகள் உள்பட 8 தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருப்பதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈேராட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார்.