ராமநாதபுரம் மாவட்டத்தில் அடை மழை: தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


ராமநாதபுரம் மாவட்டத்தில் அடை மழை: தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2021 3:53 AM GMT (Updated: 14 Jan 2021 3:53 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடைமழையால் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம், 

குமரிகடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16-ந் தேதி வரை தென்மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றளவும் நீடித்து இடைவிடாமல் சாரல் மழையாகவும் கனமழையாகவும் பெய்து வருகிறது.

பொதுவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் இறுதியில் நின்றுவிடுவது வழக்கம். ஜனவரி மாதம் கடும் பனிப்பொழிவு இருக்கும். இதுதான் ஆண்டாண்டு காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்த நிலையில் அதனை தொடர்ந்து பனிப்பொழிவுடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் அடைமழை பெய்து வருகிறது.

இந்த மழையால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது குடியிருப்புகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. எங்கு பார்த்தாலும் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளாகவே காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள்தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகை என்பதால் விழாக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிடைந்தனர்.

3 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ரோடு, கலெக்டர் அலுவலக வளாகம், டி.பிளாக் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றி சீரமைத்து வருகின்றனர்.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:- ராமநாதபுரம்- 63.5, மண்டபம்-26, பள்ளமோர்குளம்-20, ராமேசுவரம்-40.2, தங்கச்சிமடம்-26.6, பாம்பன்-21.1, ஆர்.எஸ்.மங்கலம்-32.5, திருவாடானை-48.8, தொண்டி-51.4, வட்டாணம்-59.8, தீர்த்தாண்டதானம்-43.3, பரமக்குடி-34.6, முதுகுளத் தூர்-30, கடலாடி-31.8, வாலிநோக்கம்-30.6, கமுதி-35. சராசரி-37.2.

Next Story