திருவாடானை தாலுகாவில் 300 கண்மாய்கள் நிரம்பின உபரி நீர் கடலுக்கு செல்கிறது


திருவாடானை தாலுகாவில் 300 கண்மாய்கள் நிரம்பின உபரி நீர் கடலுக்கு செல்கிறது
x
தினத்தந்தி 14 Jan 2021 3:56 AM GMT (Updated: 14 Jan 2021 3:56 AM GMT)

திருவாடானை தாலுகாவில் 300 கண்மாய்கள் நிரம்பின. உபரி நீர் கடலுக்கு செல்கிறது.

தொண்டி, 

திருவாடானை தாலுகாவில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக இந்த பகுதியில் ஓடும் விருசுழி, பாம்பாறு, மணிமுத்தாறு, காட்டாறு போன்ற ஆறுகளில் நீர் வரத்து அதிகஅளவில் வந்து கொண்டிருப்பதாலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 89 கண்மாய்களில் ஓரியூர், நாவலூர், பனஞ்சாயல், சிறுகம்பையூர், மல்லனூர் சேனவயல், வட்டாணம், என்.மங்கலம், மருங்கூர் சோழகன்பேட்டை, கலியநகரி, மானவநகரி நகரிகாத்தான், பாண்டுகுடி, கோடனூர், குஞ்சங்குளம் உள்ளிட்ட 65 கண்மாய்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.

இதேபோல் திருவாடானை யூனியன் கண்மாய்கள் மற்றும் முன்னாள் ஜமீன் கண்மாய்கள் எனும் சிறு பாசன கண்மாய்களும் முழுமையாக நிரம்பி உள்ளன. இவ்வாறு திருவாடானை தாலுகாவில் 300 கண்மாய்கள் நிரம்பின. இந்த கண்மாய்கள் முழுமையாக நிரம்பியதால் கண்மாய் உள்வாய்ப்பகுதியில் தண்ணீர் புகுந்து நெற்பயிரை மூழ்கடித்துள்ளது. பல கண்மாய்கள் உடைப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து வருகிறது.

ஒரு சில கண்மாய்கள் பெருகி உபரி வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விட்டதை தொடர்ந்து பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்ற கட்டாயத்தில் உள்ளதால் கண்மாய்கள் வெட்டி விடப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. திருவாடானை தாலுகாவில் கண்மாய்கள் சங்கிலி தொடர்போல் அமைந்து இருப்பதால் கண்மாய்கள் நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் வரத்து கால்வாய்கள் வழியாக ஆற்றில் சென்று கலந்து கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

கண்காணிப்பு

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் உதவி பொறியாளர்கள் முத்தமிழ்அரசன், மகேந்திர பாண்டியன், முகமது யாசின் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இதேபோல் யூனியன் கண்மாய்களில் உடைப்பு ஏற்படுகிறதா என்பதை 47 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கண்மாய் உடைப்பு ஏற்பட்டால் பெரும் சேதங்களை உருவாக்கிவிடும் என்பதால் உடனடியாக உடைப்பை சீரமைக்க பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் மணல் மூடைகளுடன் தயார் நிலையில் உள்ளது.

Next Story