8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்


8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2021 4:14 AM GMT (Updated: 14 Jan 2021 4:14 AM GMT)

8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் பொங்கல் திருநாளை கருப்பு தினமாக அனுசரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனமரத்துப்பட்டி, 

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மல்லூரை அடுத்துள்ள நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பாரப்பட்டி அடுத்துள்ள கூமாங்காடு பகுதியில் ஒன்று திரண்டு கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தாமாக முன்வந்து கைவிடவேண்டும். இயற்கை மற்றும் கனிம வளங்களை அழிக்க விடமாட்டோம் என கூறி கோஷம் எழுப்பினர்.

கொண்டலாம்பட்டி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிடாமல் இருப்பதாக கூறி அதற்கு பொங்கல் திருநாளை துக்க தினமாக கடைபிடித்து அவர்களது தோட்டம் மற்றும் வீடுகளின் முன்பகுதியில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

8 வழிச்சாலை போடுவதால் எங்களது வாழ்வாதாரம் முழுதும் அழிந்துவிடும். இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை துக்க நாளாக கடைபிடித்து வருவதாகவும், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story