கீழ்வேளூர் பகுதியில் தொடர் மழை: 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின விவசாயிகள் கவலை


கீழ்வேளூர் பகுதியில் தொடர் மழை: 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 14 Jan 2021 5:31 AM GMT (Updated: 14 Jan 2021 5:31 AM GMT)

கீழ்வேளூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் 15 ஆயிரம் ஏக்கர் ெநற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சிக்கல், 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து இருந்தனர். கடந்த மாதம் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு ்தயாராக இருந்த 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளன. மேலும் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விவசாயிகள் கவலை

கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள ஓக்கூர், மூங்கில்குடி, குருமனாங்குடி, அத்திப்புலியூர், வெண்மணி, காக்கழனி, ஆந்தக்குடி, கொடியலாத்தூர், ஆனைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தரைப்பாலம் மூழ்கியது

வேதாரண்யம் தாலுகாவில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மூழ்கின. மேலும் தாழ்வான பகுதிகளில் குளம் தண்ணீர் தேங்கி நின்றது. கருப்பம்புலம் பகுதியில் மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மழைநீர் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தண்ணீரை வெளியேற்றும் பணி

வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளிலும், வயல் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இந்தநிலையில் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் வெளிபிரகாரத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கோவிலின் உள்ளே மணிக்கர்ணிகை தீர்த்த குளத்தில் மழை தண்ணீர் தேங்கியதால் குளம் நிரப்பி காணப்படுகிறது. குளத்தில் தேங்கிய தண்ணீரை கோவில் நிர்வாகத்தினர் ஆயில் என்ஜின் மற்றும் மின்மோட்டார்கள் மூலம் கீழ மடவிளாகம் மற்றும் வடக்கு மடவிளாகம் வழியாக வெளியேற்று பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகி்ன்றனர்.

வெயில் அடித்தால்

அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணியும் நடக்கிறது. ஆனாலும் தொடர் மழையால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது.

மழை நின்று வெயில் அடிக்க ஆரம்பித்தால் 5 நாட்களில் கோவிலில் தேங்கி இருக்கும் அனைத்து மழை நீரும் வெளியேறிவிடும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Next Story