மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்


மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 14 Jan 2021 5:37 AM GMT (Updated: 14 Jan 2021 5:37 AM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரிகளுக்கு வைத்திலிங்கம் எம்.பி. உத்தரவிட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் பேராவூரணி, தாலுகா சேதுபாவாசத்திரம் ஒன்றியம் புக்கரம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் பேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது விவசாயிகள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட பயிர்களை எடுத்து காண்பித்தனர். இதனை பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைத்திலிங்கம் எம்.பி. விவசாயிகளிடம் கூறினார். அதேபோல் வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் எந்த ஒரு பாதிப்பும் விடுபடாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

நெற்பயிர்களை பார்வையிட்டனர்

இதையடுத்து மழையையும் பொருட்படுத்தாமல் பட்டுக்கோட்டை வட்டம் சூரப்பள்ளம், ஒரத்தநாடு வட்டம் புதூர், பாப்பாநாடு நெம்மேலி வடக்கு, அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் திருபுவனம், கோவில்பத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழையில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் சேகர் (பட்டுக்கோட்டை), கோவிந்தராசு (பேராவூரணி), உதவி கலெக்டர் பாலசந்திரன், பால்வள தலைவர் காந்தி, வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story