கடலூரில் பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


கடலூரில் பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Jan 2021 5:51 AM GMT (Updated: 14 Jan 2021 5:51 AM GMT)

கடலூரில் பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடலூர், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பானைகள் மற்றும் பொங்கலுக்கு பெயர் போன கரும்புகள், மஞ்சள் கொத்து உள்ளிட்டவை கடலூர் நகரில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டன.

குறிப்பாக கடலூர் உழவர் சந்தை முன்பு சாலையோரம் நேற்று முன்தினம் இரவே ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள் கொண்டு வந்து விற்பனைக்காக குவிக்கப்பட்டு, அதிகாலை 4 மணிக்கே வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.600 வரை விலை போனது.

உழவர் சந்தையில் குவிந்தனர்

மேலும் கடலூர் உழவர் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளையும் விற்பனைக்காக குவித்து இருந்தனர். இதனால் உழவர் சந்தை பகுதி நேற்று காலை, முதலே களைகட்ட தொடங்கியது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. உழவர் சந்ததைக்கு நேற்று 10 டன் கரும்பு, ஒரு டன் மஞ்சள் கொத்து, 5 டன் காய்கறிகள் விற்பனைக்காக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் ஒரு ஜோடி கரும்பு ரூ.70 முதல் ரூ.80 வரையும், மஞ்சள் கொத்து ரூ.10 முதல் ரூ.15 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், வண்டிப்பாளையம் சாலை, கூத்தப்பாக்கம் சாலை, மஞ்சகுப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலை, அண்ணா மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

பூக்கள்

அதேபோல் பூக்களை வாங்குவதற்கும் பூ மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டியும், வெளிமாவட்டங்களில் இருந்து வரத்து குறைவாலும், கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதாலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு குறைந்தளவே பூக்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் முல்லை, குண்டு மல்லி உள்ளிட்ட பூக்களுக்கு சீசன் இல்லாததால், அந்த பூக்கள் வரத்து இல்லை. இதனால் மற்ற பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

அந்த வகையில் கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.300-க்கு விற்பனையான கனகாம்பரம் நேற்று ரூ.600-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட சம்மங்கி ரூ.120-க்கும், ரூ.120-க்கு விற்ற சாமந்தி பூ ரூ.200-க்கும், ரூ.30-க்கு விற்பனையான கேந்தி ரூ.60-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ரோஜா ரூ.240-க்கும், கோழிக்கொண்டை ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கிச் சென்றனர்.

போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பொருட்களை வாங்க முக்கிய சாலைகளில் பொதுமக்கள் குவிந்ததால், கடலூர் நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் லாரன்ஸ் சாலை, திருப்பாதிரிப்புலியூர்-கூத்தப்பாக்கம் சாலை, இம்பீரியல் சாலை, நேரு வீதி உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் நேற்று காலை முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருந்ததை காண முடிந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் எங்கு பார்த்தாலும் திருவிழா கூட்டம் போல், மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து, பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story