பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வு


பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூ, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க குவிந்த கூட்டத்தை
x
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூ, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க குவிந்த கூட்டத்தை
தினத்தந்தி 14 Jan 2021 9:21 AM GMT (Updated: 14 Jan 2021 9:21 AM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

திருச்சி:

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

பூக்கள் விலை உயர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள், பூ, பழம் போன்றவற்றை அதிகமாக மக்கள் வாங்கி செல்வார்கள். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பே ஓரிரு மாதங்களாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து இருந்தது. இந்தநிலையில் திருச்சியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது. தற்போது மல்லிகைப்பூ வரத்து முற்றிலுமாக இல்லாத நிலையில், முல்லைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், ஜாதிப்பூ ரூ.2ஆயிரத்துக்கும், காக்கிரட்டான் கிலோ ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், கலர்ரோஸ் வகைகள் ¼ கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

இது குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் பூக்கள் செடியிலேயே கருகிவிடும். மேட்டு பாங்கான பகுதியில் விளையும் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்’’ என்றார்.

பழங்கள், கரும்பு

திருச்சி காந்திமார்க்கெட்டில் பொங்கல் மஞ்சள் கொத்து ரூ.20-க்கும், கரும்பு ஒன்று ரூ.20 முதல் ரூ.30 வரையும் விற்கப்படுகிறது. இதேபோல் பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது. மாதுளைப்பழம் கிலோ ரூ.250-க்கும், டெல்லி ஆப்பிள் கிலோ ரூ.160-க்கும், பச்சை திராட்சை கிலோ ரூ.120-க்கும், ஆரஞ்சு கிலோ ரூ.50 முதல் ரூ.70-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.45 முதல் ரூ.55-க்கும் விற்கப்பட்டது.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘தொடர் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாகவே பழங்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலையும் உயர தொடங்கியது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழங்களின் விலை மேலும் சற்று விலை உயர்ந்து உள்ளது’’ என்றார்.

Next Story