மகன் பெயரில் எழுதிய ரூ.25 லட்சம் நிலம் ரத்து செய்யப்பட்டது தாய், தந்தையை பராமரிக்காததால் உதவி கலெக்டர் நடவடிக்கை


மகன் பெயரில் எழுதிய ரூ.25 லட்சம் நிலம் ரத்து செய்யப்பட்டது தாய், தந்தையை பராமரிக்காததால் உதவி கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Jan 2021 1:15 AM GMT (Updated: 15 Jan 2021 1:15 AM GMT)

குடியாத்தம் அருகே தாய், தந்தையை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதப்பட்ட நிலம் ரத்து செய்யப்பட்டது.

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தாலுகா லத்தேரி அடுத்த காளாம்பட்டு மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 65). இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு கோவிந்தசாமி, சரவணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பெங்களூரில் மளிகை கடை வைத்துள்ளனர்.

விவசாயம் செய்து வந்த ஜானகிராமன் வயது முதிர்வு காரணமாக தற்போது எந்த பணியும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான 1½ ஏக்கர் நிலத்தை இளையமகன் சரவணனுக்கு தான செட்டில்மெண்ட் எழுதித் தந்துள்ளார்.

அப்போது பெற்றோர்களை சரவணன் பராமரித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. நிலத்தை எழுதிக்கொடுத்த பின்னர் சரிவர ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி பத்மாவை மகன் சரவணன் பராமரிக்காமல் இருந்துள்ளார். இதனால் இருவரும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

ரத்து செய்யப்பட்டது

இதனையடுத்து மகன் பெயரில் நிலம் எழுதப்பட்டதை ரத்து செய்து மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் உதவி கலெக்டருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சரவணன் தனது பெற்றோர்களை பராமரிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மூத்த குடிமக்கள் சட்டத்தின்கீழ் சரவணன் மீது தான செட்டில்மெண்டை ரத்து செய்து அதற்கான சான்றுகளை ஜானகிராமனிடம். உதவிகலெக்டர் ஷேக்மன்சூர் வழங்கினார். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story