ராமேசுவரத்தில் கோவில் இணை ஆணையரை கண்டித்து பணியாளர்கள் தர்ணா


ராமேசுவரத்தில் கோவில் இணை ஆணையரை கண்டித்து பணியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 15 Jan 2021 1:50 AM GMT (Updated: 15 Jan 2021 1:50 AM GMT)

ராமேசுவரத்தில் கோவில் இணை ஆணையரை கண்டித்து கோவில் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம், 

தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர் சங்க ராமேசுவரம் கிளை கூட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்றது. பணி மூப்பு அடிப்படையில் அர்ச்சகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பாரா பணியாளர்களை சன்னதிக்கு பணி செல்ல அனுமதிக்க வேண்டும். அலுவலக பணிகளை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலுவலர்களை மாற்று பணியிடத்தில் பணி செய்ய உத்தரவிட வேண்டும், கோவிலில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவில் இணை ஆணையர் கல்யாணியை சந்தித்து செயலாளர் எம்.கே.எம். முனியசாமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுக்க சென்றபோது கோரிக்கை மனுவை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். திருப்பி அனுப்பப்பட்ட நிர்வாகிகள் வெளியே வந்தவுடன் சங்கத்தினர் கொதிப்படைந்தனர்.

தர்ணா

மனுவை வாங்க மறுத்த இணை ஆணையரை கண்டித்து அலுவலக வாசலில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து அலுவலக பணியாளர்களும் திருக்கோவில் அர்ச்சகர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தாசில்தார் அப்துல் ஜபார், போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை மீண்டும் இணை ஆணையரிடம் கொடுக்க கேட்டுக்கொண்டனர். செயலாளர் எம்.கே.எம். முனியசாமி துணைத்தலைவர்கள் ராமமூர்த்தி, கண்ணன், துணைச் செயலாளர் அழகர்சாமி, ஆலோசகர் ககாரின், நிர்வாகிகள் முத்தையா, பழனி வேல்முருகன், ஜெய்கணேஷ் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சென்று மனு கொடுத்தனர். திருக்கோவில் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story