மயிலாடுதுறை மாவட்டத்தில், 5-வது நாளாக நீடித்த கனமழை: அறுவடை திருநாளில் அழுகும் நிலையில் பயிர்களை கண்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்


மயிலாடுதுறை மாவட்டத்தில், 5-வது நாளாக நீடித்த கனமழை: அறுவடை திருநாளில் அழுகும் நிலையில் பயிர்களை கண்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 15 Jan 2021 3:39 AM GMT (Updated: 15 Jan 2021 3:39 AM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக கனமழை நீடித்தது. அறுவடை திருநாளில் அழுகும் நிலையில் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சீர்காழியில் அதிகபட்சமாக 118 மி.மீ. மழை பதிவானது.

சீர்காழி, 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அறுவடை செய்து மகசூல் பார்க்க வேண்டிய நேரத்தில் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகி கிடப்பதை பார்க்க வேண்டி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், பெருமங்கலம், ஆதமங்கலம், சட்டநாதபுரம், அத்தியூர், எடக்குடி வடபாதி, கற்கோவில், மருவத்தூர், அட்டைகுளம், திருமுல்லைவாசல், ராதாநல்லூர், வழுதலைகுடி, எடமணல், கடைவாசல், வடகால், செம்மங்குடி, திட்டை, தில்லைவிடங்கன், விளந்திட சமுத்திரம், புங்கனூர், வள்ளுவக்குடி, மருதங்குடி, ஆலஞ்சேரி, நெம்மேலி, கொண்டல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர்.

விவசாயிகள் கண்ணீர்

கடந்த 2 நாட்களாக சீர்காழி பகுதியில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து மழை நீரில் மிதக்கிறது. பல்வேறு இடங்களில் ஏற்கனவே சாய்ந்த நெற்பயிர்கள் முளைத்த நிலையில் காட்சி அளிக்கிறது. சில இடங்களில் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன. அறுவடை திருநாளில் அழுகும் நிலைக்கு வந்து விட்ட பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். நேற்று நாள் முழுவதும் மழை விடாமல் பெய்ததால் வயல்களில் தேங்கி உள்ள தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

இந்த ஆண்டு தொடர்மழையால் சோகமான பொங்கலாக மாறி விட்டது என விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மழையால் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைஇலை, பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கொள்ளிடம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளைநிலங்களில் அதிகமாக மழை நீர் தேங்கி இருப்பதால் சம்பா விளைச்சல் என்பது கேள்விக்குறியாகி விட்டது. சரஸ்வதி விளாகம், கோபாலசமுத்திரம், திருமயிலாடி, கூத்தியபேட்டை, மாதானம், பச்சை பெருமாநல்லூர், கடவாசல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்கதிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்த பலனும் கிடையாது

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொள்ளிடம் கடைமடை பகுதியில் சமீபத்தில் பெய்த மழையினால் சம்பா நெற்கதிர்கள் வயலில் படுத்த நிலையில் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் அறுவடை செய்து எந்த பலனும் கிடையாது. அரசு 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்’ என்றனர்.

பொறையாறு

தரங்கம்பாடி, பொறையாறு, செம்பனார்கோவில், பரசலூர், சங்கரன்பந்தல், கொத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பொறையாறு பெருமாள் கோவில் தெரு, அய்யனார்கோவில் தோப்பு பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. சின்னசாமி நாயக்கர் தெருவில் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தினர் மழைநீரை வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று வரை தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் ஓட்டு வீடு, கூரை வீடு என மொத்தம் 35 வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளன. 6 ஆடு மற்றும் மாடுகள் இறந்தன. தில்லையாடி, வள்ளியம்மை நகர், நாகப்ப நகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. தில்லையாடி, பொறையாறு பகுதியில் மழைநீர் வடியாததிற்கு காரணம் ஆக்கிரமிப்பு தான் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவெண்காடு

திருவெண்காடு, நாங்கூர், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், திருநகரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை நீடித்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. கதிர் வரும் பருவத்தில் இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. நெல் மணிகள் அழுகி போக வாய்ப்பு இருப்பதாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

திருக்கடையூர்

திருக்கடையூர், பிள்ளைபெருமாள்நல்லூர், கிடங்கல், மாமாகுடி, காலமநல்லூர் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக இந்த பகுதியில் நலக்கடலை பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து பிள்ளைபெருமாள்நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘ இந்த ஆண்டு புதிய ரகங்களான வெஸ்டர்ன் 44, ஜி.7, கே.6, ஜே.எல்.ஆர். கட்ட கடலை உள்ளிட்ட ரகங்களை அதிக அளவில் சாகுபடி செய்திருநதோம். இந்த நிலையில் மழை பெய்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. எனவே அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்து உதவ வேண்டும்’ என்றனர்.

சீர்காழியில் 118 மி.மீ. மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் சீர்காழியில் அதிகபட்சமாக 118 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவுகளில் வருமாறு:-

மயிலாடுதுறை- 94, மணல்மேடு 88, கொள்ளிடம்-85, தரங்கம்பாடி-49. 

Next Story