தஞ்சையில் வருகிற 18-ந்தேதி முதல் சரக்கு ரெயில்களில் பொருட்களை ஏற்ற, இறக்க 24 மணி நேரமும் அனுமதி


தஞ்சையில் வருகிற 18-ந்தேதி முதல் சரக்கு ரெயில்களில் பொருட்களை ஏற்ற, இறக்க 24 மணி நேரமும் அனுமதி
x
தினத்தந்தி 15 Jan 2021 3:55 AM GMT (Updated: 15 Jan 2021 3:55 AM GMT)

தஞ்சையில் வருகிற 18-ந்தேதி முதல் சரக்கு ரெயில்களில் பொருட்களை ஏற்ற, இறக்க 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். இது முன்பு தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கும், சென்னை செல்வதற்கும் மெயின் லைனாக இருந்தது. நாளவடையில் விழுப்புரம்- திருச்சி வழித்தடம் முக்கிய வழித்தடமாக செயல்பட தொடங்கியது.

தற்போது தஞ்சை வழியாக அதிக ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் தற்போது கொரோனா தெற்று காரணமாக ஓரிரு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் ரெயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதே போல் தஞ்சை வழியாகவும், தஞ்சையில் இருந்தும் சரக்கு ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

நெல், அரிசி, உரம்

தஞ்சையில் இருந்து நெல், அரிசி போன்றவை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதே போல் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து உரம், அரிசி, கோதுமை போன்றவையும் வரும். இவை தஞ்சையில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் டெல்டா மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் உரம் அதிக அளவில் வரும்.

இந்த நிலையில் சரக்கு ரெயில்களில் பொருட்களை ஏற்ற, இறக்க தஞ்சை குட்ஷெட் பகுதியில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சில நேரங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களை தாண்டி சரக்கு ரெயில்களில் பொருட்களை ஏற்ற வேண்டிய நிலையில் அதற்கு உரிய அனுமதி பெற்று ஏற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் சில நேரங்களில் காலதாமதமும் ஏற்பட்டது.

24 மணி நேரமும் அனுமதி

இதே போல் இரவு நேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு ரெயில்களில் இருந்து பொருட்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தஞ்சை குட்ஷெட் பகுதியில் இருந்து சரக்கு ரெயிலில் பொருட்களை ஏற்ற, இறக்க 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டம் பிறப்பித்துள்ளது.

Next Story