19-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: தலைைம ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்


19-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: தலைைம ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
x
தினத்தந்தி 15 Jan 2021 5:29 AM GMT (Updated: 15 Jan 2021 5:29 AM GMT)

வருகிற 19-ந் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அப்போது என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு முதன்மைக் கல்வி அதிகாரி கபீர் அறிவுரை வழங்கினார்.

நாகர்கோவில், 

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வருகிற 19-ந் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி குமரி மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்க அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுத்தப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது.

இந்தநிலையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வி அளித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை விளக்கிக்கூறும் வகையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தலைமை ஆசிரியர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

25 மாணவர்களுக்கு மிகாமல்...

மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கபீர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 19-ந் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும். பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும். ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் கவனிக்க வேண்டும். ஆனால் சமூக இடைவெளியைப் பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால் கூடுதல் இருக்கைகள் அமைப்பதன் மூலம் அதிக மாணவர்களுக்கு இடமளிக்கலாம்.

இசைவுக்கடிதம்

இணையவழி, தொலைதூர கற்றல் முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும். பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தும்போது சில மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருவதை விட இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்கள் அவ்வாறு கலந்து கொள்ள அனுமதிக்கப்படலாம்.

பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர். பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம். மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத்துறையால் வழங்கப்படும்.

வெப்ப பரிசோதனை

பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தினசரி கிருமி நாசினி உபயோகித்தல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். தினமும் மாணவர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பள்ளிக்கு வரும்போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு முதன்மைக்கல்வி அதிகாரி கபீர் பேசினார்.

487 பள்ளிகள்

இதில் கல்வி மாவட்ட அதிகாரிகள் மோகனன் (நாகர்கோவில்), ராமச்சந்திரன் நாயர் (தக்கலை), லெட்சுமண சாமி (குழித்துறை), ரெஜினி (திருவட்டார்), முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன், வள்ளிவேலு மற்றும் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் என 206 உயர்நிலைப்பள்ளிகள், 281 மேல்நிலைப்பள்ளிகளை ேசர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story