பெருந்துறை தொகுதியில் ரூ.2¾ கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


பெருந்துறை தொகுதியில் ரூ.2¾ கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Jan 2021 6:26 AM GMT (Updated: 15 Jan 2021 6:26 AM GMT)

பெருந்துறை தொகுதியில் ரூ.2¾ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகளை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

ஈரோடு, 

பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட சீனாபுரம் ஊராட்சியில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த நிழற்குடையை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கல்லாகுளம் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.6 லட்சம் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த தொட்டியையும் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

புதிதாக குள்ளம்பாளையம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் புதிய தார் ரோடு போடப்பட உள்ளது. இதுபோல் நிச்சாம்பாளையத்திலும் ரூ.30 லட்சம் செலவில் புதிய தார் ரோடு போடப்பட உள்ளது. இந்த பணிகளை அவர் தொடங்கி வைத்து கிராம மக்கள் மத்தியில் பேசினார். இங்கு ரூ.5 லட்சம் செலவில் ஆழ்குழாய் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

குடிநீர் இணைப்பு

வெட்டையன் கிணறு ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த கட்டுமான பணி தொடக்க நிகழ்ச்சி மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் என்னும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு ஊராட்சிகளிலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி குள்ளம்பாளையம், நிச்சாம்பாளையம், கல்லாகுளம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி ரூ.1 கோடியே 90 லட்சத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

ரூ.2¾ கோடி...

மொத்தம் பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம், நிச்சாம்பாளையம், கல்லாகுளம் ஊராட்சிகளில் மட்டும் ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் வளர்ச்சித்திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் பார்வதிராஜ், முன்னாள் தலைவர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அர்ச்சுனன், வளர்மதி, செல்வம், சங்கீதா, முன்னாள் தலைவர்கள் முத்து, தாமோதரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story