பா.ஜனதா மேலிடம் உத்தரவின்பேரில் மந்திரி பதவி: மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு இடையூறு செய்ய கூடாது: முதல்-மந்திரி எடியூரப்பா


விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வச்சநானந்தா மடாதிபதி எள், வெல்லம் ஊட்டியதை படத்தில் காணலாம்
x
விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வச்சநானந்தா மடாதிபதி எள், வெல்லம் ஊட்டியதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 15 Jan 2021 9:00 PM GMT (Updated: 15 Jan 2021 6:26 PM GMT)

மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு இடையூறு செய்யக் கூடாது என முதல்-மந்திரி எடியூரப்பா கண்டித்துள்ளார்.

மந்திரிசபை விரிவாக்கம்
கர்நாடகத்தில் கடந்த 13-ந்தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மந்திரி பதவிக்கு காத்திருந்து ஏமாற்றம் அடைந்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்களின் அதிருப்தி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா, நேற்றுமுன்தினம் மாைல தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவில் உள்ள வீரசைவ லிங்காயத் சமுதாய மடத்தில் நடைபெற்ற சங்கராந்தி பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத் ேஜாஷி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இடையூறு செய்ய கூடாது
பா.ஜனதா மேலிட தலைவர்களின் உத்தரவின்பேரில் மந்திரி பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் யாரும் தனக்கு மந்திரி வழங்கபடவில்லையே என வருத்தப்பட வேண்டாம். மேலும் மந்திரி பதவியை காரணம் காட்டி எந்தவொரு எம்.எல்.ஏ.வும் நன்றாக நடந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு இடையூறு செய்ய கூடாது. அனைத்தும் பா.ஜனதா மேலிட தலைவர்களின் ஆலோசனைபடியே நடந்து வருகிறது.

அதையும் மீறி வேண்டுமென்றே யாரேனும் தகராறு செய்தால் அவர்கள் மீது கட்சி மேலிடத்தில் புகார் அளிக்கப்படும். ஆகையால் அதனை கவனத்தில் கொண்டு அனைவரும் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு சாதகமான பட்ஜெட்
இந்த மாதம்(ஜனவரி) கடைசியில் சட்டசபை கூட்டு கூட்டமும், மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரும் நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு சாதகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story