பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு: தாமிரபரணியில் வெள்ளம் குறைந்தது; சேதப்பகுதிகளில் மீட்புப்பணி தீவிரம்


மண்சரிவை தேசிய பேரிடர் மீட்புகுழுவினர் அகற்றியபோது; வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்; நெல்லை தாமிரபரணி
x
மண்சரிவை தேசிய பேரிடர் மீட்புகுழுவினர் அகற்றியபோது; வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்; நெல்லை தாமிரபரணி
தினத்தந்தி 15 Jan 2021 8:30 PM GMT (Updated: 15 Jan 2021 6:47 PM GMT)

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், தாமிரபரணியில் வெள்ளம் குறைந்தது. இதையடுத்து வெள்ள சேதப்பகுதிகளில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரைபுரண்டு ஓடிய வெள்ளம்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை நீடித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில், வௌ்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆற்றங்கரைகளில் வசித்த மக்களை அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, சேரன்மாதேவி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீ்ட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மணிமுத்தாறு அணையில் இருந்து மாஞ்சோலைக்கு செல்லும் சாலையில் சேதமடைந்த இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை தீவிரமாக அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

வெள்ளம் குறைந்தது
நேற்று முன்தினம் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரத்து 863 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்பட்டது. தொடர்ந்து நேற்று மழைப்பொழிவு சற்று குறைந்து, அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 7,050 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 6,400 கன அடி தண்ணீரும், கடனாநதி அணையில் இருந்து 2,500 கன அடி தண்ணீரும், ராமநதி அணையில் இருந்து 360 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 16 ஆயிரத்து 310 கன அடி வீதம் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளமும் சற்று குறைந்தது. இதனால் நெல்லையிலும் ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் தண்ணீரில் மூழ்கி இருந்த தைப்பூச மண்டபம் வெளியில் தெரிந்தது. எனினும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

மீ்ட்பு பணிகள் தீவிரம்
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, நெல்லை மீனாட்சிபுரம், கருப்பந்துறை, பாளையங்கோட்டை தியாகராஜநகர் குமரேசன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த சில நாட்களாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே, அங்கு வசித்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆற்றங்கரைகளில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுடன் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தயார் நிலையில் உள்ளனர்.

பலத்த மழையின் காரணமாக, பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பைச் சேர்ந்த ராஜா என்பவரது வீடும், அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரதும்வீடும் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் வெள்ள சேதப்பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

விவசாய நிலங்களில் தேங்கிய தண்ணீர்
பலத்த மழை காரணமாகவும், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததாலும் நெல்லை பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பின. நெல்லை அருகே பால்கட்டளை குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. நெல்லை அருகே சுத்தமல்லி, கொண்டாநகரம், கோடகனுர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கின. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

மழை அளவு விவரம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-68, சேர்வலாறு-27, மணிமுத்தாறு-62, நம்பியாறு-63, கொடுமுடியாறு-10, அம்பை-42, சேரன்மாதேவி-42, நாங்குநேரி-12, ராதாபுரம்-8, பாளையங்கோட்டை-24, நெல்லை-13.80, கடனா -72 ராமநதி- 8, கருப்பாநதி- 7, குண்டாறு-11, ஆய்க்குடி-5.30, சங்கரன்கோவில்-11, செங்கோட்டை 13, சிவகிரி-22.30, தென்காசி-7.40.

Next Story