களக்காடு, விக்கிரமசிங்கபுரம், கடையம், சுரண்டை பகுதியில் தொடர் மழைக்கு 7 வீடுகள் இடிந்தன


களக்காட்டில் மழைக்கு இடிந்த வீட்டை படத்தில் காணலாம்.
x
களக்காட்டில் மழைக்கு இடிந்த வீட்டை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 15 Jan 2021 9:15 PM GMT (Updated: 15 Jan 2021 7:45 PM GMT)

களக்காடு, விக்கிரமசிங்கபுரம், கடையம், சுரண்டை பகுதியில் தொடர் மழைக்கு 7 வீடுகள் இடிந்தன.

வீடுகள் இடிந்து விழுந்தது
நெல்லை மாவட்டம் களக்காடு கோவில்பத்தை சேர்ந்த கண்ணன் மனைவி சரஸ்வதி (வயது 54). இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இவரது வீடு இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் ஒரு மாடும், 2 கன்றுகுட்டிகளும் சிக்கிக் கொண்டன. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாட்டையும், கன்றுக்குட்டிகளையும் உயிருடன் மீட்டனர்.

இதேபோல் நாங்குநேரி அருகே உள்ள வடக்கு இளையார்குளத்தில் கூலித்தொழிலாளி மோசஸ் தங்கராஜ் என்பவருடைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.விக்கிரமசிங்கபுரம் அருகே அருணாசலபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த சுடலைமாடன் சுவாமி கோவில் அருகே வசித்து வருபவர் இளங்கோவன். கூலி தொழிலாளியான இவரது வீடு தொடர் மழையில் 
இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் பிரேம்குமார் சென்று பார்வையிட்டார்.

பொருட்கள் நாசம்
தென்காசி மாவட்டம் கடையம் சொரிமுத்து பிள்ளை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி துரை. நேற்று அதிகாலை இவர் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்கூரை மழை காரணமாக இடிந்து விழுந்து கிடந்ததை பார்த்து துரை வீட்டிலுள்ளோரை வெளியே அழைத்துக்கொண்டு சென்றார். இதனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் வீட்டின் ஒரு பக்க சுவர் முழுவதுமாக இடிந்து வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் 
சேதமடைந்தன.

சுரண்டை
சுரண்டை சந்தை பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ராமர். இவருக்கு சொந்தமான வீட்டு மாடியின் கிழக்குப்புற சுவர், தற்போது பெய்து வரும் மழையால் இடிந்து விழுந்தது. இதேபோல் இடையர்தவணை வடக்குத்தெருவில் திருமலை என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் மாடசாமி மனைவி கோமதியம்மாள் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அந்த வீடு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் சம்பவ இடத்துக்கு வந்தார். வீட்டில் குடியிருந்தவர்களை மாற்று இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார். மேலும் சுரண்டை அருகே உள்ள துரைச்சாமிபுரம் அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சீனியம்மாள் என்பவருக்கு சொந்தமான மண் சுவரினால் ஆன வீடும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

Next Story