திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தண்ணீரில் மிதக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர்; நிவாரணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை


துளசேந்திரபுரத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ள காட்சி
x
துளசேந்திரபுரத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ள காட்சி
தினத்தந்தி 15 Jan 2021 11:24 PM GMT (Updated: 15 Jan 2021 11:24 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தண்ணீரில் மிதக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர்தேங்கியது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். மழை, தொடர்ந்து பெய்ததால் அனைத்து பணிகளும் தேக்க நிலை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
கனமழையால் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள பழமை வாய்ந்த கருணாகரேஸ்வரர் சிவன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. கோவில் கர்ப்பகிரகத்திற்குள் தண்ணீர் புகுந்து சாமி சிலைகளை சுற்றி தண்ணீர் தேங்கியது. மேலும் பிரகாரத்தை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பக்தர்கள் வழிப்படுவதற்கு சிரமப்படுகின்றனர். இந்த கோவில் பழமையான கோவில் என்பதால் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார்குடி
மன்னார்குடி பகுதியில் 15 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே சம்பா சாகுபடி செய்திருந்தனர்.ஏற்கனவே புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக நெற்பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நெற்பயிருக்கு உரம் தெளித்து விவசாயிகள் பாதுகாத்து வந்த நிலையில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மன்னார்குடி பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக கர்ணாவூர், சவளக்காரன், காரிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருப்பாலக்குடி, பைங்காநாடு, துளசேந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 15 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கி உள்ளன.

நிவாரணத்தை உயர்த்த கோரிக்கை
இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு எப்பொழுதும் ஆகும் செலவை விட 2 மடங்கு கூடுதல் செலவு செய்ததாகவும் தற்போது மழையால் மொத்தமும் நஷ்டமாகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர். தற்போது வயல்களில் தேங்கி உள்ள தண்ணீர் வடிந்தாலும் பயிர்களை முழுமையாக பாதுகாக்க முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு ஏற்கனவே அறிவித்த நிவாரணத்தை மாற்றி ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் என நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீடாமங்கலம்
நீடாமங்கலம் பகுதியில் நேற்று பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. குறிப்பாக நீடாமங்கலம் கடைவீதி மற்றும் வங்கி அருகில் மழைநீர் தேங்கி நின்றது.

இதைப்போல பெரியார் சிலை எதிரில் நெடுஞ்சாலையில் ஏற்கனவே ஏற்பட்ட பள்ளத்தில் மழைநீர் நிரம்பி நின்றது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்த பள்ளம் இருப்பதை கவனிக்காமல் கீழே விழுந்து காயமடைந்தனர்.

எனவே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக சம்மந்தப்பட்டதுறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டூர்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. பெருகவாழ்ந்தான் அருகே உள்ள கண்ணன் ஆற்றில் தரைப்பாலத்துக்கு மேல் அதிகம் தண்ணீர் செல்வதால் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பாலையூர் மண்ணுக்குமுண்டான் செந்தாமறைக்கண் - தெற்குநாணலூர் தேவதானம், கருணாவூர் - சித்தமல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுக்கூர், பட்டுக்கோட்டை போன்ற நகரங்களுக்கு இந்த வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும்.

தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் மழைக்காலத்தில் கண்ணன் ஆற்றில் தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் அதிகம் செல்கிறது.

இதனால் ஆண்டுதோறும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. எனவே பழமையான இந்த பாலத்தை இடித்து விட்டு கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய அளவில் புதிய பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story