பொங்கலுக்கு தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் திருப்பூர் வெறிச்சோடியது


கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.; திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள மேம்பாலத்தில்
x
கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.; திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள மேம்பாலத்தில்
தினத்தந்தி 16 Jan 2021 12:49 AM GMT (Updated: 16 Jan 2021 12:49 AM GMT)

பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் திருப்பூர் வெறிச்சோடி காணப்பட்டது.

பின்னலாடை நிறுவனங்கள்
பின்னலாடை தயாரிப்புக்கு பெயர்பெற்ற திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாநகரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுவதால் அங்கேயே தங்கி தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதுதவிர திருப்பூரில் ஓட்டல்கள், பேக்கரி, டீ கடைகள், மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நடத்திவருகிறார்கள்.

சொந்த ஊர் சென்றனர்
பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பின்னர் பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததும் ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள். இதற்காக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு கடந்த 13-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. 17-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். 13-ந் தேதி இரவு வெளி மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டதால் பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதுபோல் ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

சாலைகள் வெறிச்சோடின
வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதன் காரணமாக நேற்று திருப்பூர் பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. 

குமரன் ரோடு, அவினாசி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, பி.என். ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக டீ கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இங்கிருந்த மக்கள் டீக்கடைக்கு செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

விடுமுறை முடிந்து 18-ந் தேதி பின்னலாடை நிறுவனங்களை திறக்க தொழில் துறையினர் முடிவு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு பிறகு பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகளவு வந்துள்ளது. இதனால் ஆடை உற்பத்தி பணியை விரைவில் தொடங்க இருக்கிறார்கள். இதன் காரணமாக வருகிற 18-ந் தேதி பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களை திறந்து செயல்படுத்த தொழில்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வாகன காப்பகங்கள் நிறைந்தன
சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகன காப்பகங்களில் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக மேற்கண்ட இடங்களில் உள்ள வாகன காப்பகங்களில் இருசக்கர வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது. ரெயில் நிலையம் அருகே உள்ள வாகன காப்பகங்களுக்கு வெளியேயும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து இருந்ததை காணமுடிந்தது.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கும். விடுமுறை விடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் இல்லாமல் தொழிற்பேட்டைகள் வெறிச்சோடி இருக்கிறது. மேலும் தொழில் நிறுவனங்கள் அருகிலுள்ள டீ கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியே அமைதியாக காணப்படுகிறது. பெரும்பாலான வியாபாரிகள் சொந்த ஊர் சென்றதால் மளிகை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

வடமாநில தொழிலாளர்கள்
மாநகரில் வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் தங்கியிருக்கிறார்கள். நேற்று மாநகர கடைவீதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் காணமுடிந்தது. திருப்பூர் மாநகராட்சி 
சந்திப்பு, புது மார்க்கெட் வீதி, வளர்மதி பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில இளைஞர்கள், இளம்பெண்கள் கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.

காய்கறி மார்க்கெட்
இந்த நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் வியாபாரம் அதிகம் இருக்காது என்பதால் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய குறைந்த அளவே தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று கொண்டு வந்தனர். சில விவசாயிகள் பீர்க்கங்காய், புடலை மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய காய்கறிகளை மட்டும் விற்பனைக்கு வைத்திருந்தனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகக் குறைந்தளவே காய்கறிகளை வாங்க மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

இதுபோல் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் விவசாயிகள் அதிகம் வருவதால் காய்கறிகளும் மிக குறைந்தளவே காணப்பட்டன. திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தினசரி மார்க்கெட் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது.

Next Story