உறவினர் வீட்டிலேயே நகை திருடியதாக மனைவி கோபித்து சென்றதால் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி


உறவினர் வீட்டிலேயே நகை திருடியதாக மனைவி கோபித்து சென்றதால் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி
x
தினத்தந்தி 16 Jan 2021 2:04 AM GMT (Updated: 16 Jan 2021 2:04 AM GMT)

உறவினர் வீட்டிலேயே நகை திருடியதாக மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்திலேயே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சூளைமாநகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). தனியார் கம்பெனி ஊழியர். இவரது வீட்டில் 2 பவுன் தங்க நகை மாயமானதாக துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில் வசிக்கும் அவரது தாய்மாமா லோகநாதன் (42) என்பவர் குடும்பத்துடன் ரஞ்சித்குமார் வீட்டுக்கு வந்து சென்றதாக தெரியவந்தது.

இதனால் போலீசார் சந்தேகத்தின்பேரில் லோகநாதனை துரைப்பாக்கம் போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். அதில் அவர், ரஞ்சித்குமார் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.

உடனே ரஞ்சித்குமார், தாய்மாமா என்பதால் லோகநாதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம். நகையை அவரிடம் இருந்து வாங்கி கொள்கிறேன். புகார் மனுவையும் திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்றார்.

போலீஸ் விசாரணையில் லோகநாதன் மீது வேறு எந்த புகாரும் இல்லை என்பதும், வறுமை காரணமாக உறவினர் என்றும் பாராமல் ரஞ்சித்குமார் வீட்டில் திருடியதும் தெரிந்தது. முதல் முறை என்பதால் மாநகர போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில் லோகநாதனுக்கு அறிவுரை கூறி எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் போலீஸ் நிலையத்தில் இருந்த லோகநாதனின் மனைவி, உறவினர் வீட்டிலேயே நகை திருடியதால் இனி உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று கூறி லோகநாதனுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த லோகநாதன், திடீரென தன்னிடம் இருந்த பிளேடால் தனது கை மற்றும் கழுத்தில் அறுத்து கொண்டார். உடனடியாக அவரை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவரது குடும்பத்தினரை அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story