தூத்துக்குடியில் 3 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்; 7 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல்


தூத்துக்குடி பாரதிநகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்; எட்டயபுரம் ரோட்டில் மறியல்
x
தூத்துக்குடி பாரதிநகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்; எட்டயபுரம் ரோட்டில் மறியல்
தினத்தந்தி 16 Jan 2021 9:12 PM GMT (Updated: 16 Jan 2021 9:12 PM GMT)

தூத்துக்குடியில் 3 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி 7 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்
தூத்துக்குடி மாவட்டத்தில் சற்று மழை வெறித்திருந்தாலும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்களின் அன்றாட செயல்பாட்டை முடக்கிப் போட்டதால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். மேலும் சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சொந்த வீடுகளை விட்டு விட்டு மாடி வீடுகளை தேடி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் நேற்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்த போதும், மழை அளவு சற்று குறைந்துள்ளது. இது ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளித்து வரும் பொதுமக்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் நேற்று வரை பெய்த மழையில் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொந்த வீடுகளை காலி செய்து வாடகை வீடுகளை தேடி செல்கின்றனர்.

கடந்த வாரம் மழையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுமக்கள் காலி செய்துள்ளனர். மேலும் மாடி வீடுகளையோ அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்றவற்றையோ வாடகைக்கு தேடி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வாடகை வீடுகளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் 7 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகத்தால் மழை வெள்ள நீரை வெளியேற்ற முடியவில்லை. தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்ற மின்சார மோட்டார்களை வாடகைக்கு வாங்கி 
பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீரிறைக்கும் மோட்டார்களுக்கும் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.

சாலைமறியல்
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், தனசேகரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்த மழை நீரை அகற்றக் கோரியும், இதற்கு தடையாக உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று முன்தினம் மறியல் நடந்தது.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் நேற்று ஜேசிபி மூலம் மழை நீரை அகற்றும் பணி தொடங்கி விட்டு, அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் நேற்று எட்டயபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் ரோட்டின் இரு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேக்கம் அடைந்து, கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் மழை வெள்ள நீரை அகற்றும் பணி தொடங்கும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

தொழில்கள் முடக்கம்
தொடர்ந்து பெய்த மழை காரணமாக வீடுகள் மட்டுமல்லாது அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மீன் இறங்கு தளம், தனியார் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையங்கள், பஸ் பணிமனைகள், கார் ஷெட்டுகள் உள்ளிட்டவை அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநகராட்சி சார்பில் வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள மோட்டார்களில் பல மோட்டார்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் தங்களது சொந்த செலவில் மின்மோட்டார்கள், ஜேசிபி எந்திரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பியுள்ளன. பருவ விவசாயம் மற்றும் மானாவாரி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி வருவாய்த்துறையினர், வேளாண்மை துறையினர், மானாவாரி மற்றும் பிசான பருவ பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகளை இன்று தொடங்குகின்றனர்.

Next Story