தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி; கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்


திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கிவைத்து
x
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கிவைத்து
தினத்தந்தி 16 Jan 2021 9:31 PM GMT (Updated: 16 Jan 2021 9:31 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் கோவிட் 19 தடுப்பூசி முதற்கட்டமாக தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி, புதுக்கோட்டை கிராமபுற அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக கோவிட் 19 தடுப்பு பணியில் களப்பணியாளர்களாக பணியாற்றிய சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் கடை நிலை ஊழியர்கள் வரை தடுப்பூசி போடப்படுகிறது. இதில் முதற்கட்டமாக 37 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த தடுப்பூசி மிகவும பாதுகாப்பானது. இவர்களுக்கு முதலில் 0.5 மில்லியும், அடுத்ததாக 28 நாட்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியாக 0.5 மில்லி போடப்படுகிறது. 2-வது கட்டமாக வருவாய் துறை, போலீஸ் மற்றும் கோவிட் 19 தடுப்பு பணியில் ஈடுபபட்ட பணியாளர்களுக்கு போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், தூத்துக்குடி மாவட்ட மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா (பொறுப்பு) , திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, சீனியர் டாக்டர் பாவநாசகுமார், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களான செவிலியர், டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.

பின்னர் அரை மணி நேரம் அங்கே அமர வைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 28-வது நாள் அவர்கள் மீண்டும் ஒரு தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் கூறுகையில், இங்கு 2 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக திட்டமிடப்பட்டு உள்ளது என்றார். மேலும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்களுக்கு உடல் ரீதியில் எந்தவித பாதிப்பும் இல்லை. இயல்பாகவே உள்ளதாக தெரிவித்தனர்.

முன்னதாக தொடக்க நிகழ்ச்சியில் கொேரானா தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாலையம்மாள், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், டாக்டர் பாவலன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, ராஜேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story