சிவகங்கையில் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை முதல்வர் ரெத்தினவேல் போட்டுக்கொண்டபோது
x
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை முதல்வர் ரெத்தினவேல் போட்டுக்கொண்டபோது
தினத்தந்தி 16 Jan 2021 11:05 PM GMT (Updated: 16 Jan 2021 11:05 PM GMT)

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி
இந்தியா முழுவதும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியின் தொடக்கவிழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார்.மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல் வரவேற்று பேசினார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியும், மதுரையில் முதல்-அமைச்சரும் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் சிவகங்கையில் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

முதல் தடுப்பூசி மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேலுக்கு போடப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் நலப்பிரிவின் தலைவர் டாக்டர் சிவக்குமார் போட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மற்ற மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

100 பேருக்கு...
தடுப்பூசி போட வருபவர்கள் ஒரு வழியில் வந்தனர். அவர்கள் ஊசி போட்ட பின்னர் மற்றொரு வழியில் சென்றனர்.ஊசி போட்டு கொண்டவர்களை சுமார் அரை மணி நேரம் தங்க வைத்து கண்காணித்து அனுப்பினர். நேற்று ஒரு நாளில் 100 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் யோகவதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் .மஞ்சுளா பாலசந்தர் மற்றும் அரசு மருத்துவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏற்பாட்டில் தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் காட்சியும், தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடுவதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் நேரடி ஒலிபரப்பு மூலம் காண்பிக்கப்பட்டது.

Next Story