திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி


திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 17 Jan 2021 12:09 AM GMT (Updated: 17 Jan 2021 12:09 AM GMT)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திண்டுக்கல், 

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கிய இந்த வைரசால் பல கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரசின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இதில் இந்தியாவும் தடுப்பு மருந்துகளை தயாரித்து மக்களுக்கு கொடுக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டது.

இதன் பலனாக ‘கோவேக்சின்’ தடுப்பூசி உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி பல்வேறு கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றது. இதையடுத்து தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதியும் வழங்கப்பட்டு நாடு முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், கொரோனாவுக்கு எதிரான முன்கள பணியாளர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.

அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, பழனி அரசு மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மையநாயக்கனூர், தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 5 மையங்களில் தடுப்பூசி போடுவதற்காக கோவின் (cowin) என்ற செயலியை பயன்படுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பித்த 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் விஜயலட்சுமி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார் உள்பட இணையதளம் மூலம் பதிவு செய்த சுகாதாரத்துறையினர் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள 5 மையங்களிலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடும் அளவுக்கு மருந்து, ஊசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 8,200 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள் உள்பட மொத்தம் 7,354 பேர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முதற்கட்டமாக மாவட்டத்தில் தேனி உள்பட 3 மையங்களில் நேற்று முன்கள பணியாளர்கள் 77 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 33 பேருக்கும், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் 19, கம்பம் அரசு மருத்துவமனையில் 25 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். அப்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் இளங்கோவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

Next Story