மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Jan 2021 3:09 AM GMT (Updated: 17 Jan 2021 3:09 AM GMT)

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாைம மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை பெரியார் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மருத்துவ பணியில் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருந்தாளுனர் செல்வகுமார் என்பவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன.

3 இ்டங்களில்...

அப்போது மாவட்ட கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

சீர்காழி

இதேபோல் சீர்காழி பகுதியில் கடந்த ஒரு வாரமாக பருவம் தவறி பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் புளிச்சகாடு, ஆர்ப்பாக்கம், குணதலபாடி, விளந்திட சமுத்திரம், அத்தியூர், கொண்டல், மருதங்குடி, அகணி, சட்டநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மிதந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்தநிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா நேரில் சென்று புளிச்சகாடு, குணதலபாடி, விளந்திடசமுத்திரம் ஆகிய இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகள் கண்ணீர் மல்க கூறுகையில், கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து இருந்தோம் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது பருவம் தவறி பெய்த தொடர் மழையால் கடந்த ஒரு வாரமாக மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கி, அழுகி வருகிறது.

எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் இல்லையென்றால் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார். சீர்காழி தாலுகா பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடுமாறு அறிவுறுத்தினார். அப்போது சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண் உதவி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராமன், வேதயராஜன் மற்றும் முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story