மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Jan 2021 3:16 AM GMT (Updated: 17 Jan 2021 3:16 AM GMT)

மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அழுகிய நெற்பயிர்களுடன் வந்த பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், விவசாயிகள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பனசை அரங்கன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில இணை செயலாளர் தங்கராசு, தகவல் சட்ட ஆர்வலர்கள் கூட்டமைப்பு வக்கீல் பிரகா‌‌ஷ், நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், நிர்வாகி விக்னே‌‌ஷ் மற்றும் நிர்வாகிகள் மழையில் நனைந்து அழுகி வீணான நெற்கதிர்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ரூ.50 ஆயிரம்

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. எனவே டெல்டா பகுதியை தேசிய பேரிடராக அறிவித்து விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்குவது ஏற்புடையதாக இல்லை. விவசாயிகள் நலன் கருதி உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழகஅரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story