கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Jan 2021 5:12 AM GMT (Updated: 17 Jan 2021 5:12 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை பொது மருத்துவமனை உள்பட 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 2 மையங்களில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.

இதில் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் முருகேசன், மருத்துவர் பழமலை மற்றும் செவிலியர்கள், மருத்துவபணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் இவர்கள் காத்திருப்பு அறையில் 30 நிமிடம் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களுக்கு கலெக்டர் கிரண்குராலா வாழ்த்து தெரிவித்தார்.

தியாகதுருகத்தில்

தொடர்ந்து தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த மையத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர், மருந்தாளுனர் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சதீஷ்குமார், கொரோனா முதன்மை மருத்துவ கண்காணிப்பு அலுவலர் சிவக்குமார், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

6,200 பேருக்கு தடுப்பூசி

முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என, ஒரு மையத்தில் 100 பேர் வீதம், நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முதல்நாளான நேற்று குறைந்த எண்ணிக்கையிலேயே முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story