நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது - முதல் நாளில் 300 பேருக்கு போடப்பட்டது


நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது - முதல் நாளில் 300 பேருக்கு போடப்பட்டது
x
தினத்தந்தி 17 Jan 2021 3:38 PM GMT (Updated: 17 Jan 2021 3:38 PM GMT)

நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் 3 மையங்களில் தொடங்கியது. முதல் நாளில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டார். தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணிப்பு அறையில் அரை மணி நேரம் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட்டது.

முன்னதாக அவர்களது விவரங்கள் கோ-வின் என்ற செயலியில் பதிவு செய்யப்பட்டு, தடுப்பூசி போட்ட பின்னர் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அவர்கள் சமூக இடைவெளி விட்டு நிறுத்தி வைக்கப்பட்டனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ பார்வையிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, கேத்தி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக கோவை மண்டல தடுப்பூசி மையத்தில் இருந்து 5,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து பெறப்பட்டு, மாவட்ட தடுப்பூசி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

நீலகிரியில் மொத்தம் 4,845 பேர் தடுப்பூசி போடுவதற்காக கோ-வின் என்ற இணையதளத்தில் பதிவு செய்து உள்ளனர். இதில், இன்று (அதாவது நேற்று) ஒரு மையத்தில் 100 நபர்கள் வீதம் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். அரசின் அடுத்த அறிவிப்பு வந்தவுடன் 2-ம் கட்டமாக தடுப்பூசி முன்னிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், 4-ம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story