பொங்கல் பண்டிகை முடிந்து 70 ஆயிரம் வாகனங்களில் சென்னைக்கு சென்றனர் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் + "||" + 70,000 vehicles left for Chennai after Pongal festival at Ulundurpet
பொங்கல் பண்டிகை முடிந்து 70 ஆயிரம் வாகனங்களில் சென்னைக்கு சென்றனர் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை முடிந்து 70 ஆயிரம் வாகனங்களில் ஏராளமானோர் சென்னைக்கு திரும்பியதால் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
சென்னையில் வசித்து வந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. எனவே நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள், தங்களது சொந்த வாகனங்களில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். இதனால் உளுந்தூர்பேட்டை மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் காலை 10 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சுங்கச்சாவடியில் கட்டண வசூல் மையம் பல இருந்தாலும் பாஸ்ட் டேக் முறை அமலில் இருப்பதால் இரு மார்க்கங்களிலும் ஒரு கட்டண வசூல் மையம் மட்டுமே திறந்து இருந்தது. இதனால் பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டி இருந்த வாகனங்கள் சிரமம் இன்றி சுங்கச்சாவடியை கடந்து சென்றன.
போக்குவரத்து நெரிசல்
ஆனால் உபயோகிப்பாளர் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் இருமார்க்கங்களிலும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்து நின்றனர். நேரம் செல்ல செல்ல கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வாகன போக்குவரத்தால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டண வசூல் மையங்களை திறந்து வாகன ஓட்டிகளிடம் கட்டணங்களை வசூலித்தனர். இதையடுத்து வரிசையில் காத்து நின்ற வாகன ஓட்டிகள் கட்டணத்தை விரைவாக செலுத்திவிட்டு சுங்கச்சாவடியை கடந்து சென்றனர். இதன் பிறகே போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைய தொடங்கியது.
70 ஆயிரம் வாகனங்கள்
இது குறித்து சுங்கச்சாவடி அதிகாரி ஒருவர் கூறுகையில், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை 33 ஆயிரம் வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளது. 7 மணிக்குபிறகுதான் அதிகளவு வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை கணக்கில் எடுத்துக்கொண்டால் நள்ளிரவு வரை மொத்தம் 70 ஆயிரம் வாகனங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கிறேன். பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்றார்.
ஊர்ந்து சென்ற வாகனங்கள்
வழக்கமாக உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வாகனங்கள் சென்னை நோக்கி செல்லும். ஆனால் நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் எறும்புபோல் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.