மூங்கில்துறைப்பட்டு அருகே குளத்தின் கரை உடையும் அபாயம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


மூங்கில்துறைப்பட்டு அருகே குளத்தின் கரை உடையும் அபாயம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Jan 2021 11:09 PM GMT (Updated: 17 Jan 2021 11:09 PM GMT)

முங்கில்துறைப்பட்டு அருகே உடையும் நிலையில் உள்ள குளத்தின் கரையை சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் கோரி்க்கை விடுத்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வட பொன்பரப்பியில் தனியார் பள்ளியின் அருகில் கசிவு நீர் குளம் உள்ளது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் மழைக்காலங்களில் பெய்து வரும் தண்ணீர் அருகில் இருக்கும் காப்பு காட்டின் வழியாக நீர் கசிந்து குளத்திற்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகவும் குளம் முழுவதும் நிரம்பி உள்ளது.

இந்த நிலையில் குளத்தின் கரையில் குறிப்பிட்ட பகுதி சேதம் அடைந்து இருப்பதால் அதன் மூலம் தண்ணீர் கசிந்து வெளியேறி வருகிறது. இதனால் நாட்கள் செல்ல செல்ல குளத்தின் கரை வலுவிழந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் காப்பு காட்டில் உள்ள தண்ணீர் அதிகளவில் குளத்துக்கு வருகிறது.

சீரமைக்க கோரிக்கை

மேலும் குளத்தின் கரையில் சேதம் ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள நூற்றுக் கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய பயிர்கள் முழுவதும் சேதம் அடையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை நேரில் பார்வையிட்டு கரையை பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story