10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் நாளை திறப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் நாளை திறப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 18 Jan 2021 12:24 AM GMT (Updated: 18 Jan 2021 12:24 AM GMT)

மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர், 

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் நோயின் தாக்கம் சற்று குறைந்து உள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இருப்பினும் பெற்றோர்களின் கருத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதற்கிடையில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து மீண்டும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர்.

நாளை திறப்பு

இதையடுத்து 19-ந்தேதி(நாளை) 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது பெற்றோரின் விருப்ப கடிதத்தை பெற்று வர வேண்டும். கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

நோய்த்தொற்று இருப்பவர்கள் கண்டிப்பாக வரக்கூடாது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றிய அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் போன்ற பல்வேறு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை கடைபிடித்து தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

முன்னேற்பாடு பணிகள்

கடலூர் மாவட்டத்தில் 226 அரசு, அரசு உதவி பெறும், தனியார் உயர்நிலைப்பள்ளிகள், 266 மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி, கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்துதல், வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருத்தல், கழிவறைகளை சுத்தப்படுத்துதல், சானிடைசர் போதுமான அளவுக்கு இருப்பு வைத்தல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன்படி கடலூர் வேணுகோபாலபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் சுதா தலைமையில் பள்ளி வளாகம் சுத்தப்படுத்தும் பணி, வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்தல், கழிவறைகளை சுத்தம் செய்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏற்பாடு செய்தல், சானிடைசர் போதுமான அளவு இருப்பு வைத்தல், முக கவசம் வைத்தல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகளை ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்தனர்.மேலும் பழைய மேஜைகளுக்கு பச்சை வர்ணம் பூசுதல் போன்ற தூய்மை பணிகளும் நடைபெற்று வருகிறது.

25 மாணவர்கள்

இதே போல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிக்கூடம் திறந்த பிறகு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிப்பது, மாணவர்களை 6 அடி இடைவெளி விட்டு அமர வைப்பது, ஆசிரியர்கள், மாணவர்கள் எப்போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். குடிநீர், உணவு போன்றவற்றை மற்றவர்களுடன் பகிரக்கூடாது போன்ற பல்வேறு அறிவுரைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story