உக்கடம் மேம்பாலத்துக்கு குறுக்கே செல்லும் உயர்அழுத்த மின்கம்பிகளை பூமிக்கடியில் பதிக்கும் பணி தொடக்கம்


உக்கடம் மேம்பாலத்துக்கு குறுக்கே செல்லும் உயர்அழுத்த மின்கம்பிகளை பூமிக்கடியில் பதிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 18 Jan 2021 1:14 AM GMT (Updated: 18 Jan 2021 1:14 AM GMT)

உக்கடம் மேம்பாலத்துக்கு குறுக்கே செல்லும் உயர்அழுத்த மின்கம்பிகளை ரூ.7 கோடி செலவில் பூமிக்கடியில் பதிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

கோவை,

கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடம்-ஆத்துபாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

முதல் கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்காக 55 தூண்கள் அமைக்கப்பட்டு பாலத்தில் தளம் அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. உக்கடம் பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

2-ம் கட்ட பணிகள்

இதற்கிடையே 2-ம் கட்டமாக கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

உக்கடம் -ஆத்துபாலம் இடையே முதல் கட்ட மேம்பால பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 2-ம் கட்ட பணிக்கு ரூ.152 கோடியில் டெண்டர் கோரப்பட உள்ளது. இதனால் இன்னும் ஒரிரு மாதங்களில் 2-ம் கட்ட பணிகள் தொடங்கும்.

உக்கடம்- ஆத்துபாலம் மேம்பாலத்தில் போத்தனூர் பிரிவு, ஆத்துபாலம், உக்கடம் பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது.

உயர்அழுத்த மின்கம்பிகள்

மேம்பாலத்தின் குறுக்கே உக்கடம் பஸ் நிலைய பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கிறது. அதை பூமிக்கடியில் பதித்தால் தான் மேம்பால பணிகள் துரிதமாக செய்ய முடியும். எனவே உயர்அழுத்த மின்கம்பிகளை பூமிக்கடியில் பதிக்க ரூ.7 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. அந்த பணிகள் இன்னும் 3 மாதங்களில் நிறைவடையும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நிலம் கையகப்படுத்தும் பணி

மேம்பாலத்தின் 2-ம் கட்ட பணிக்காக நிலம் கையகப்படுத்துவது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

உக்கடம் முதல் கரும்புக்கடை வரை மேம்பால முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரை மேம்பால பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும். இதற்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். பின்னர் நில உரிமையாளர்களின் ஒப்புதலுடன் நிலம் கையகப்படுத்தப்படும். அதற்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உக்கடம் மேம்பால பணிகள் முழுமையாக முடிந்து போக்குவரத்து தொடங்க மேலும் 2 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்றே தெரிகிறது. 

Next Story