பிரதமர், முதல்-அமைச்சர் முன்னுதாரணமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும்; மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்


மாணிக்கம் தாகூர் எம்.பி.
x
மாணிக்கம் தாகூர் எம்.பி.
தினத்தந்தி 18 Jan 2021 1:29 AM GMT (Updated: 18 Jan 2021 1:29 AM GMT)

பிரதமர், முதல்-அமைச்சர் முன்னுதாரணமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

பேட்டி

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்தமைக்கு விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

பா.ஜனதா கட்சியினர் தாங்கள் ஏதோ சாதனை படைத்து விட்டதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு தன் நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்கள்.

வாய்ப்பு
அதேபோன்று பிரதமரும், மத்திய சுகாதார மந்திரியும், தமிழக முதல்-அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தால் மக்களும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு முன் வர வாய்ப்பு ஏற்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் பிரதமரை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளோம்.

விரிவாக்கம்
மதுரை விமான நிலையத்தில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய, ஓடுதளத்தின் கீழ் தரைகீழ் பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர்களிடம் பேசியுள்ளேன். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவேன்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஜப்பான் நிறுவனம் முழுமையாக நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும் இது எப்போது கிடைக்கும் என்ற உறுதிப்பாடு இல்லாத நிலை உள்ளது. எனவே மத்திய அரசு ஜப்பான் நிதி உதவியினை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டியது அவசியமாகும்.

தொகுதி பங்கீடு
காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் புதிதாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிலையில் கட்சியின் வளர்ச்சி முக்கியமாக தேவைப்படும் நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனம் அவசியமான ஒன்றுதான். சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின் தான் பேச முடியும். காங்கிரஸ் தலைமை இதுபற்றி தி.மு.க. தலைவருடன் பேசி முடிவு எடுக்கும். தி.மு.க. தலைமை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பள்ளிகள் திறப்பு
பெற்றோரின் கருத்துக்கேட்புக்கு பின் தான் பள்ளிகள் திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மாணவ - மாணவிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வாய்ப்புள்ள தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தப்படும். இம்மாவட்டத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற காங்கிரஸ் கட்சியினர் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர் சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் வேணுகோபால், சிவகுருநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story