குடிமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்


குடிமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Jan 2021 5:21 AM GMT (Updated: 18 Jan 2021 5:21 AM GMT)

குடிமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியானான்.

குடிமங்கலம், 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கோட்டமங்கலம் அய்யம்பாளையம் புதூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஹரிபிரசாத் (வயது (17). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இந்த நிலையில் ஹரிபிரசாத் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றுக்கு குளிக்க சென்றான்.

தற்போது குடிமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளதால், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்படி அவர்கள் குளிக்க சென்ற கிணற்றிலும் நீர்மட்டம் உயர்ந்து கணப்பட்டது. 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் இருந்தது.

தண்ணீரில் மூழ்கினான்

கிணற்றில் உள்ள தண்ணீரை பார்த்ததும், கிணற்றில் இறங்கி ஹரிபிரசாத் குளிக்க முயன்றான். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினான். இதையடுத்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினான். அப்போது கிணற்றின் கரையில் நின்று கொண்டிருந்த மற்ற 2 பேரும் ஹரிபிரசாத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் ஹரி பிரசாத்தை காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து ஹரிபிரசாத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஹரிபிரசாத் தண்ணீருக்குள் மூழ்கினான். இதுகுறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடல் மீட்பு

உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மிதவை உதவியுடன் ஹரிபிரசாத்தை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் ஹரிபிரசாத் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடல் உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story